ஹால் நீலக்கல் வைர அட்டிகை (Hall Sapphire and Diamond Necklace) என்பது, நீலக்கல்லும், வைரக்கற்களும் பதிக்கப்பட்ட ஒரு அட்டிகை ஆகும். இதில் இலங்கையில் பெறப்பட்டனவும், மொத்தமாக 195 கரட் அளவு கொண்டனவுமான ஒரே மாதிரியான 36 நீலக்கற்களும், அதைச் சுற்றிலும் மொத்தம் 83.75 கரட் அளவுள்ள 435 பட்டை தீட்டிய வைரக் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. நீலக்கற்கள் தலையணை வெட்டு (cushion-cut) முறையில் வெட்டப்பட்டுள்ளன. வைரங்களிற் சில பேரிக்காய் வடிவம் கொண்டவை. ஏனையவை வட்டமாக வெட்டப்பட்டவை. அட்டிகை பிளாட்டினத்தில் செய்யப்பட்டது.[1][2]
இது அரி வின்சுட்டன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. இது தற்போது சிமித்சோனிய நிறுவனத்தின் ஒரு பகுதியாகிய, வாசிங்டன் டி. சி. யில் உள்ள இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள நிலவியல், இரத்தினக்கல், கனிமங்கள் ஆகியவற்றுக்கான ஜனட் அனன்பேர்க் ஊக்கர் மண்டபத்தில், லோகன் நீலக்கல்லுக்கும் பிசுமார்க் நீலக்கல் அட்டிகைக்கும் அருகில் இந்த அட்டிகை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[3] இது 1979ல் திருமதி ஈவ்லின் அனன்பேர்க் ஹால் என்பவரால் சிமித்சோனிய நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.[1] இதனால், இவர் பெயரிலேயே அட்டிகைக்குப் பெயரிடப்பட்டது. இவர் பதிப்பாளரும், வணிகரும், கொடைவள்ளலுமான வால்ட்டர் அனன்பேர்க்கின் சகோதரி ஆவார்.[4]