ஒத்தோவியோ குவாத்ரோச்சி (Ottavio Quattrocchi) (1939 - 12 ஜூலை 2013) இந்தியாவில் போபர்ஸ் ஊழல் வழக்கில் கையூட்டுகளுக்கு இடைவழியாக செயல்பட்டதாக 2009ஆம் ஆண்டுவரை குற்றஞ்சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த ஓர் இத்தாலிய வணிகராவார்.[1] இவர் 12 ஜூலை 2013 அன்று மாரடைப்பால் மிலன் நகரில் இறந்தார்.[2]
இந்த ஊழல் வழக்கில் குவாத்ரோச்சியின் பங்கும் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன், அவரது இத்தாலிய மனைவி சோனியா காந்தி வழியே, ஏற்பட்டிருந்த நெருக்கமும் 1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு தோல்வியுற காரணமாக அமைந்திருந்தது. பத்தாண்டுகள் கழித்து (1999), நடுவண் புலனாய்வுச் செயலகம் (சிபிஐ) இந்த ஊழல் வழக்கில் கையூட்டுகள் கைமாற இவர் வழித்தடமாக இருந்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டது. சூன் 2003ஆம் ஆண்டு பன்னாட்டுக் காவலகம் குவாத்ரோச்சியும் அவரது மனைவி மாரியாவும் இலண்டன் வங்கி பிஎஸ்ஐ ஏஜியில் மூன்று மில்லியன் மற்றும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வைத்திருந்ததாக வெளியிட்ட பின்னணியில் இக்குற்றச்சாட்டு வலுவடைந்தது.[3] முடக்கப்பட்டிருந்த இந்த வங்கிக் கணக்குகள் எதிர்பாராதநிலையில், இதனை முடக்க உத்தரவிட்டிருந்த சிபிஐக்குத் தெரியாமலே, சனவரி 2006 ஆம் ஆண்டு இந்திய சட்ட அமைச்சகத்தால் முடக்கம் நீக்கப்பட்டது.[4]
6 பிப்ரவரி 2007 அன்று ஓத்தோவியோ குவாத்ரோச்சி அர்கெந்தீனாவில் பன்னாட்டுக் காவலக பிடியாணையின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் தோல்வியடைந்ததால், அரைமனது முயற்சிகளை மேற்கொண்டதாக நடுவண் புலனாய்வுச் செயலகம் விமரிசிக்கப்பட்டது.[5] இந்தியா இந்த நாடுமீட்பு வழக்கில் தோல்வியடைந்ததற்கு "தகுந்த சட்டபூர்வ ஆவணங்களைக் கூட அளிக்கவில்லை" என்று வழக்கு நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.[6] இந்தியாவிற்கு தர்மசங்கடமாக குவாத்ரோச்சியின் சட்டச் செலவுகளையும் ஏற்குமாறு அர்ச்சென்டினா நீதிமன்றம் உத்தரவிட்டது.[7][8]
சனவரி,2011ஆம் ஆண்டு வருமானவரி மறு ஆய்வு தீர்ப்பாயம் குவாத்ரோச்சி மற்றும் வின் சாதாவிற்கு 41 கோடி இந்திய ரூபாய்கள் தரகாக கைமாறியது எனவும் இதற்கான வருமானவரியை அவர்கள் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது இந்த வழக்கை திரும்பப் பெற நடுவண் புலானாய்வுச் செயலகம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் திருப்பம் ஏற்படுத்தி உள்ளது.[9]