சுசுமு ஓனோ (Susumu Ōno, ஜப்பானியம்: 大野 晋, Ōno Susumu; ஆகஸ்ட் 23, 1919-ஜூலை 14, 2008) என்பவர் டோக்கியோவில் பிறந்த மொழியியல் ஆராய்ச்சி நிபுணர். இவர் பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக் கொணர்ந்தவர். 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் டோக்கியோவில் கக்குசியூவின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1999 இல் இவர் வெளியிட்ட ஜப்பான் மொழி பற்றிய ஆய்வு நூல் 2 மில்லியன் பிரதிகள் விற்பனையாகின.
1957 இல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் துவங்கினார். அவர் ஜப்பானிய மொழியைக் கொரிய மொழி, மற்றும் ஆஸ்திரனேசிய மொழிகளுடனும் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மொழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் சப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார். திராவிட மொழிகளின் தாக்கம் ஜப்பான் மொழியில் நிறைந்து கிடப்பதை அறிந்தார். குறிப்பாக கிமு 500 - கிபி 300 களில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட விவசாயம், கப்பல் போக்குவரத்து, வர்த்தகம் போன்றவற்றினால் இப்படியான தாக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பது இவரது வாதம். சப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
தமிழ் படிக்கத் தமிழ்நாட்டுக்கு வந்த சுசுமு ஓனோ சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர்.
1970களின் பிற்பகுதியில் இவர் தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த தனது கருதுகோள்களை வெளியிட்டார். இக்கருத்துகள் ஆரம்பத்தில் 1970 இல் "சுசுமு ஷீபா" என்பவராலும் பின்னர் "அகீரா ஃபூஜிவாரா" (1981) என்பவராலும் முன்வைக்கப்பட்டிருந்தன[1]. ஓனோவின் ஆய்வுகள் ஒலி, சொற்கள், இலக்கணம், மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல், தொல்பொருள் ஆய்வு, நாட்டுப்பாடல்கள் போன்றவற்றிலும் ஆய்வுகளை மேற்கொண்டார்[2]. இவர்களது ஆய்வுகள் பல ஜப்பானிய மொழியியல் ஆய்வாளர்களிடையே வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பின[3].
ஓனோவின் பணியைப்பற்றி கமில் சுவலபில் என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: ஜப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்[4].
சுசுமு ஓனோ தமிழ் அமைப்புகள், மற்றும் தமிழாய்வாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பல ஜப்பானிய மாணவர்கள் தமிழ் கற்க ஊக்கப்படுத்தினார். இலங்கையைச் சேர்ந்த தமிழாய்வாளர்கள் பேராசிரியர்கள் ஆ. சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ் போன்றவர்கள் ஓனோவுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர்.