மதனகாம ராஜன் | |
---|---|
இயக்கம் | பி. என். ராவ் |
தயாரிப்பு | அமிர்தம் டாக்கீசு, ஜெமினி ஸ்டூடியோஸ் |
கதை | கதை பி. எஸ். இராமையா |
இசை | எம். டி. பார்த்தசாரதி எஸ். ராஜேஸ்வர ராவ் |
நடிப்பு | வி. வி. சடகோபன் கே. எல். வி. வசந்தா என். கிருஷ்ணமூர்த்தி கொத்தமங்கலம் சுப்பு டி. எஸ். துரைராஜ் எம். வி. ராஜம்மா கே. ஆர். செல்லம் எம். எஸ். சுந்தரிபாய் |
ஒளிப்பதிவு | ஆதி எம். இரானி |
விநியோகம் | ஜெமினி பிக்சர்சு சர்க்யூட் |
வெளியீடு | நவம்பர் 28, 1941 |
ஓட்டம் | . |
நீளம் | 17907 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மதனகாம ராஜன் (Madana Kama Rajan) 1941 -இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். இராமையா எழுதி, பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், கே. எல். வி. வசந்தா, கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மதனகாம ராஜன் இளவரசன் (வி. வி. சடகோபன்), அவனது நண்பன் (என். கிருஷ்ணமூர்த்தி) ஆகியோரின் சாகசக் கதை ஆகும்.[4]
மாயேந்திரபுரி இளவரசன் மதனகாம ராஜனும் (வி. வி. சடகோபன்) மந்திரி மகன் குணசீலனும் (என். கிருஷ்ணமூர்த்தி) இணை பிரியாத தோழர்கள். அவர்களுடைய குருதேவரின் (கொத்தமங்கலம் சுப்பு) பெண் பகவதி (எம். எஸ். சுந்தரிபாய்). அவளுக்கு இளவரசன் மேல் காதல். குருதேவரின் சீடன் சோமதேவனுக்கு (எம். ஆர். சுவாமிநாதன்) பகவதி மேல் ஆசை. அவன் பகவதியைத் தன் வசப்படுத்த முயலுகிறான். பகவதி சாகசம் செய்து தன் தந்தையின் கோபத்தைத் தூண்டி விட, அவர் சோமதேவனைப் பாம்பாகும்படி சபிக்கிறார்.[4]
ஒருநாள் குணசீலன் இளவரசனை ஆற்றங்கரையில் தனியாக விட்டுவிட்டு வீட்டிற்குப் போகிறான். பகவதி அதையறிந்து ஆற்றங்கரைக்குப் போய் இளவரசனிடம் தன் ஆசையை வெளியிடுகிறாள். அவன் அவளை விரட்டி விடுகிறான். பகவதி கோபத்துடன் ஓடி தன் தந்தையிடம் இளவரசன் தன்னைப் பிடித்து இழுத்து பலவந்தம் செய்ததாக முறையிடுகிறாள். அவர் மகாராஜாவிடம் போய்க் கூச்சலிடுகிறார். மகாராஜா கோபத்தில் இளவரசனைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிடுகிறார். இதனை அறிந்த குணசீலன் கொலையாளிகளைச் சமாதானம் செய்து அனுப்பிவிட்டு இளவரசனுடன் நாட்டை விட்டு ஓடி, இந்திரபுரி என்ற ஊருக்கு வருகிறார்கள். அங்கே கோவில் சுவற்றில் ஒரு அழகான பெண்ணின் சித்திரம் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட இளவரசன் படத்திலிருந்த பெண் மேல் மோகம் கொண்டு பிரமை பிடித்தவன் போல நின்று விடுகிறான். அந்தப் பெண் நேரில் வந்தாலன்றி இளவரசன் மனம் தெளியாது என்பதைக் கண்ட குணசீலன் அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டு போகிறான்.[4]
சித்திரத்திலிருந்தது பீமபுரி இளவரசி பிரேமவல்லி (கே. எல். வி. வசந்தா). பாம்பாக சபிக்கப்பட்ட சோமதேவன் சுற்றியலைந்து பீமபுரிக்கு வந்து பிரேமவல்லியைக் கண்டு அவள் மேல் மோகம் கொண்டு அவளருகிலேயே வசிக்கிறான். பீமபுரி அரசன் (ஜி. வி. சர்மா) பிரேமவல்லியை அங்கதேச இளவரசனுக்கு மணம் செய்விக்க ஏற்பாடு செய்கிறான். கல்யாண நேரத்தில் சோமதேவன் பாம்பாக வந்து கடிக்க அங்கதேச இளவரசன் இறக்கிறான்.[4]
பிரேமவல்லியைத் தேடிக்கொண்டு குணசீலன் பீமபுரிக்கு வந்து சேருகிறான். அங்கே அரசனின் பெரிய போயி (புலியூர் துரைசாமி) மூலம் இளவரசியைப் பார்க்கிறான். பிறகு அங்கதேச இளைய இளவரசன் போல வேடம் தரித்து பிரேமவல்லியைத் தனக்கு மணம் புரிந்து கொடுக்கும்படி கேட்கிறான். அரசன் சம்மதிக்க திருமணம் நடக்கிறது. திருமணத்தின் போது, குணசீலன் தாலியைத் தன் கையால் கட்டாமல், சுமங்கிலிப் பெண்களைக் கொண்டு கட்டச் செய்கிறான். இரவில் பள்ளியறையில் சோமதேவன் பாம்பாக வந்து குணசீலனை எதிர்க்கிறான். குணசீலன் பாம்பின் வாலை வெட்டிவிடுகிறான். பாம்பு பயந்து ஓடுகிறது. அதோடு சோமதேவன் சாபமும் விமோசனமாகிறது. சோமதேவன் பழி வாங்குவதாக சபதம் செய்கிறான்.[4]
பிரேமவல்லி பள்ளியறைக்கு வருகிறாள். குணசீலன் பக்குவமாகப் பேசிக் கதை சொல்லி இரவைக் கழிக்கிறான். இப்படிப் பன்னிரெண்டு இரவுகள் கழிகின்றன. பதின்மூன்றாம் நாள் பிரேமவல்லியிடம் இளவரசன் மதனகாம ராஜனைப் பற்றிச் சொல்லி குணசீலன் அவளையும் அழைத்துக் கொண்டு புறப்படுகிறான். பிரேமவல்லியும், இளவரசன் மதனனும் கோவிலில் சந்திக்கிறார்கள். குணசீலன் கோவிலைச் சுற்றி வரும்போது, இரண்டு ஆந்தைகள் "இந்த இளவரசன் தன் ஊருக்குத் திரும்பும் வழியில் அவனுக்கு இரண்டு பெரிய விபத்து நேரும். அதில் தப்பிவிட்டால் ஊருக்குப் போனவுடன் அவன் முதல் மனைவியின் கையாலேயே மடிவான், இந்த இரகசியத்தை யாராவது வெளியிட்டால் அவன் மண்டை வெடித்து இறப்பான்" என்று பேசியதைக கேட்கிறான். இளவரசன் பிரேமவல்லியுடன் தன் ஊருக்குத் திரும்புகிறான். வழியில் ஆந்தை சொன்னபடி இரண்டு விபத்துகள் நேருகின்றன. குணசீலன் அவனைக் காப்பாற்றுகிறான். ஊருக்குப் பக்கத்தில், பிரேமவல்லியை ஒரு கிராமத்தில் விட்டு விட்டு இளவரசனும் குணசீலனும் நகரத்திற்குத் திரும்புகிறார்கள்.[4]
சோமதேவன் அவர்களுக்கு முன்பே நகரத்துக்கு வந்து இளவரசனின் முதல் மனைவி காமவல்லியின் மனதைக் கலைக்கிறான். அவளிடம் வசிய மருந்தென்று சொல்லி ஏமாற்றி, விஷத்தைக் கொடுத்து, இளவரசன் வந்தவுடன் கொடுக்குப்படி சொல்லி வைக்கிறான். இளவரசனும் அதைக் குடித்து இறக்கிறான். (மிகுதி வெள்ளித்திரையில்)[4]
இத்திரைப்படத்தில் நடித்த நடிக, நடிகையர்:[4]
|
|
பாபநாசம் சிவன் எழுதிய பாடல்களுக்கு[4] எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.
எண் | பாடல் | பாடியோர் | இராகம்-தாளம் |
---|---|---|---|
1 | தோழியரே போய் வருவோம் | நகரப் பெண்கள் | சூரட்-தாத்தா |
2 | விட மாட்டேன் விட மாட்டேன் | கே. ஆர். செல்லம் | சரசுகதி நோட் |
3 | அம்பா உன் பாதம் பணிந்தேன் | எம். வி. ராஜம்மா | நாட்டை-ஆதி |
4 | கேகைவன்ன தோகைமின்ன | வி. வி. சடகோபன் | கல்யாணி-ஆதி |
5 | வாழ்வினில் இன்றே நன்னாள் | எம். எஸ். சுந்தரிபாய், வி. வி. சடகோபன் | - |
6 | கைகொடுப்பேன் அம்மா | எம். வி. ராஜம்மா | சுருட்டி-ஆதி |
7 | சுவாமி சரணம் | (பார்வதி) | ஆனந்தபைரவி-ஆதி |
8 | யாரோ அறியேன் - அகம் புகுந்தார் | கே. எல். வி. வசந்தா | சாரங்கி-ஆதி |
9 | துணைநீயே அருள்தாராய் | வி. வி. சட்கோபன், என். கிருஷ்ணமூர்த்தி | கானடா-மிச்ரம் |
10 | ஒருநாளு முமைப் பிரியவிடேன் | கே. எல். வி. வசந்தா | சரசுவதி-ஆதி |
11 | மின்திற மேனி கண்கவரும் விசித்திரமே | வி. வி. சடகோபன் | ராகமாலிகை-விருத்தம் |
12 | என்னைத்தேற்றி தூதுசெல்ல ஒருவரில்லை | கே. எல். வி. வசந்தா | பீம்பிளாசு-திச்ர ஆதி |
13 | ஏனிந்த வெட்கம் மனமே உனக்கு | கே. எல். வி. வசந்தா | பிலகரி |
14 | என்ன கொல்லி என்னை அழைப்பார் | ஈ. எஸ். கமலகுமாரி | உசேனி-துக்கடா-ஆதி |
15 | கதியொன்று சொல்லுவேன் கேள் | என். கிருஷ்ணமூர்த்தி | துர்காசாவேரி-ஆதி |
16 | வல்லவனன்றோ உனக்கு மாலையிட வேண்டும் | என். கிருஷ்ணமூர்த்தி | பீலு-திரிதாளம் |
17 | மனதிற்குகந்த கணவனடைந்தும் | ஈ. எஸ். கமலகுமாரி | அடானா-ரூபகம் |
18 | தீர கம்பீர உதார குணன் | என். கிருஷ்ணமூர்த்தி | பரசு-ஆதி |
19 | இன்றே உன் மனம் | வி. வி. சடகோபன் | சிந்துபைரவி |
20 | பிரேமா நீயில்லாமல் உறங்குவதெங்கே | வி. வி. சடகோபன் | மோகனம்-ஆதி |
21 | வீணானதே எந்தன் ஆசை | என். கிருஷ்ணமூர்த்தி | கரகரப்பிரியா-ஆதி |
22 | அமலே அமரர்கள் பணியும் | எம். வி. ராஜம்மா | குந்தலவராளி-ஆதி |
23 | மந்திரியே இம்மாநிலமீதில் மனிதர்களெல்லாம் வசிக்கின்றனரா | டி. எஸ். துரைராஜ், எம். எஸ். சுந்தரிபாய் | - |
24 | ராஜு ஓச்சாடம்மா | (பல்லக்கு போயிகள்) | - |
மதனகாம ராஜன் 1941 நவம்பர் 28 அன்று ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு இது பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.[1] "படத்தில் இசை கருநாடக அடிப்படையிலும், நகைச்சுவை கலந்தும் இருந்ததால் இது தமிழ் திரைப்பட உலகில் மிகவும் வரவேற்கத்தக்க இரண்டு சீர்திருத்தங்கள்," என இந்தியன் எக்சுபிரசு பத்திரிகை எழுதியிருந்தது.[5]