அனுருத்த ரத்வத்தை | |
---|---|
பிறப்பு | அனுருத்த ரத்வத்தை சூலை 14, 1938 இலங்கை |
இறப்பு | நவம்பர் 24, 2011 கண்டி, இலங்கை | (அகவை 73)
தேசியம் | சிங்களவர் |
பணி | பாதுகாப்பு அமைச்சர் |
அறியப்படுவது | இலங்கை அரசியலுக்கு முக்கிய பங்காற்றியவர் |
சமயம் | பௌத்தம் |
பிள்ளைகள் | லொகான் ரத்வத்தை |
ஜெனரல் அனுருத்த லூக்கே ரத்வத்தை (Anuruddha Leuke Ratwatte, சூலை 14 1938 – நவம்பர் 24 2011) இலங்கையின் அரசியல்வாதியும் இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் ஆவார்.[1][2][3]
இவர் மாவனெல்லை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கண்டி தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமேயுமான ஹரிஸ் லூக்கே ரத்வத்தையின் மகனாவார். கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1966ஆம் ஆண்டு தொடக்கம் 1971ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் கண்டி மாநகர சபையின் உறுப்பினராக இருந்துள்ளார். இவர், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் உறவினராவார்.
இவர், பாத்ததும்பற தேர்தல் தொகுதியின் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைப்பாளராகச் செயற்பட்டவர். கண்டி மாவட்ட விளையாட்டு அமைப்பை நிறுவி அதன் மூலம் பல்வேறு சேவைகளைச் செய்தவர். கண்டி மாவட்டத்தில் மின்சார சீரமைப்பு, கண்டி கிழக்கு குடிநீர் விநியோகத் திட்டம் போன்றவற்றில் இவர் சிறந்த பங்களிப்பு செய்துள்ளார்.
இவர் 1994 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டுவரை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வின் அரசில் பிரதிப்பாதுகாப்பு அமைச்சராகவும், மின்சக்தி எரிபொருள் அமைச்சராகவும் பணி புரிந்தார். இக்காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டிருந்த ரத்வத்தை 1995ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்.
2001ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது கண்டியில் இடம்பெற்ற உடதலவின்ன மடவளை தேர்தல் வன்முறையில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்ட இவர் பின்னர் நீதிமன்றத்தால் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார்.