அலரி மாளிகை | |
---|---|
![]() | |
பொதுவான தகவல்கள் | |
நகரம் | கொழும்பு |
நாடு | இலங்கை |
கட்டுவித்தவர் | இலங்கை அரசாங்கம் |
அலரி மாளிகை (Temple Trees, சிங்களம்: අරලියගහ මන්දිරය), அல்லது பிரதமர் இல்லம் (Prime Minister's House) எனப்படுவது இலங்கைப் பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடமாகும். இது கொழும்பில் கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ளது. ஒரு சில அண்மைய அரசுத்தலைவர்களும் இதனைத் தங்கள் அதிகாரபூர்வ வதிவிடமாக பாவித்து வருகின்றனர். இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை பயன்படுத்தி வருகிறார்.
அலரி மாளிகையின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்துடன் ஆரம்பமாகிறது. இதன் உரிமை பல்வேறு முக்கிய பிரித்தானிய நிருவாகிகளிடமிருந்தும் வணிகர்களிடமிருந்தும் கைமாறப்பட்டு வந்திருக்கிறது. 1830-1834 காலப்பகுதியில் இலங்கை கறுவாத் திணைக்களத் தலைவர் சான் வாபியொஃப் என்பவர் இங்கு வசித்து வந்தார். பின்னர் கொழும்பு ஒப்சேர்வர் பத்திரிகையின் முதலாவது ஆசிரியரும், பிரபல வணிகருமான ஜோர்ஜ் வின்டர் என்பவர் இதனை வாங்கினார். பின்னர் 1856 ஆம் ஆண்டில் ஜோன் பிலிப் கிறீன் எனபவருக்கு விற்கப்பட்டது. இந்த ஓரடுக்கு மனையைச் சுற்றி வளர்க்கப்பட்ட கோயில் மரங்கள் எனப்படும் அலரிச் செடிகளைக் கருத்தில் கொண்டு இம்மாளிகைக்கு அவர் Temple Trees எனப் பெயரிட்டார்[1]
இம்மாளிகை பிரித்தானிய அரசாங்கத்தினால் விலைக்கு வாங்கப்பட்டு அன்றைய பிரித்தானிய நிருவாகியின் அதிகாரபூர்வ வதிவிடமாகப் பயன்படுத்தப்பட்டது. 1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இது முதலாவது பிரதமர் டி. எசு. சேனநாயக்காவின் வதிவிடமானது[2]. முன்னாள் பிரதமர் சாலமன் பண்டாரநாயக்கா இதனை அதிகாரபூர்வ வைபவங்களுக்கு மட்டும் பயன்படுத்தி வந்தார்.
1962 ஆம் ஆண்டு சனவரி 27 இல் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி முயற்சி ஒன்றின் போது அலரி மாளிகையே முதன்மைத் தாக்குதல் மையமாகத் திட்டமிடப்பட்டிருந்தது[3]. இம்முயற்சிக்கு முன்னோடியாக இங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவக் கவச வாகனங்கள் பல முன்னதாகவே அகற்றப்பட்டன. ஆனாலும், புலனாய்வுப் பகுதி, மற்றும் இலங்கைக் கடற்படையினரின் பாதுகாப்பு அலரி மாளிகைக்குக் கொடுக்கப்பட்டது. புரட்சியில் ஈடுபட்ட பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர்.[4]
1971 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியினரின் கிளர்ச்சியின் போது அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா 1971, ஏப்ரல் 4 ஆம் நாள் தனது தனிப்பட்ட வதிவிடத்தில் இருந்து பாதுகாப்புக்காக அவசர அவசரமாக அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர். பல மூத்த அமைச்சர்கள் பலரும் பாதுகாப்புக்காக இங்கு வந்து தங்கியிருந்தனர்.
1970களில் இருந்து அலரி மாளிகையைச் சுற்றிப் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டது. ஈழப்போரைக் கருதி சுற்றிவரவுள்ள பாதைகள் பல மூடப்பட்டன.