உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு | |
---|---|
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு இலச்சினை | |
தொடக்கம் | ஜூன் 23, 2010 |
முடிவு | ஜூன் 27, 2010 |
இடம் | கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
இணையத்தளம் | |
www.ulakathamizhchemmozhi.org |
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010-ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் ஜூன் 27 வரையிலான 5 நாட்கள் கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். தமிழ் இணைய மாநாடும் இந்த மாநாட்டுடன் சேர்த்து நடத்தப்பட்டது.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினைச் சிறப்பான முறையில் நடத்திட தமிழ்நாடு அரசு பல குழுக்களை அமைத்திருந்தது.
குழுக்கள் முழுப் பட்டியல்
ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை பிப்ரவரி 2010 இல் கோவையில் நடத்த முதலில் தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இது குறித்த அறிவிப்பை முதல்வர் மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்திருந்தார்[1]. இம்மாநாட்டை நடத்துவதற்குப் போதிய கால அவகாசம் இல்லை என உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிர்வாகக் குழுவின் இரு உறுப்பினர்கள் சம்மதிக்காததால் இந்த மாநாட்டுக்கு ஈடாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டது[2].
திமுக தலைமை வகிக்கும் தமிழக அரசால் ஒருங்கிணைக்கப்படும் செம்மொழி மாநாட்டை அதிமுக, மதிமுக கட்சிகள் புறக்கணித்தன. "கருணாநிதியால் நடத்தப்பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உலகத்தமிழ் மாநாடு வரிசையில் இடம் பெறாததால், இந்த மாநாட்டில் அதிமுக கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவே திமுக அரசால் நடத்தப்படும் இந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அதிமுக புறக்கணிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் ஜெயலலிதா. அதே போல உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மதிமுகவும் பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்." [3] மாநாடு கூட்டுவதில் அரசியல் நோக்கு யாதும் இல்லையென்றும், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் பங்கேற்பு உண்டு என்றும் முதலமைச்சர் அறிக்கை விடுத்தார்[4].
ஈழத் தமிழர்கள் பெரும் அழிவைச் சந்தித்து, வதை முகாங்களில் இருக்க உலகத் தமிழாராய்ச்சி அல்லது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பொருத்தமானதா என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் கேள்வி விடுத்தது. "பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்தார்[5].
தமிழர்களாக இருந்ததால், பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட, சிறைப்பட்ட சூழலில் மொழியைக் கொண்டாடுவது தமிழறிஞர்களின் சுயநலம் ஆகும். முதலில் எதிர்ப்புத் தெரிவித்த பல அறிஞர்கள் பின்னர்ச் சேர்ந்து கொண்டதும் தமது சுயநலத்தை முதற்கொண்டே. "தமிழினத்திற்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்படும் சூழலிலும் தமிழறிஞர்கள் தமிழுக்கு நன்மை என்ற வாதத்தை முன்வைப்பது எவ்வளவு அபத்தமானது."[6]