எஸ். என். லட்சுமி | |
---|---|
![]() | |
இயற் பெயர் | செந்நெல்குடி நாராயணத் தேவர் லட்சுமி[1] |
பிறப்பு | 1934 |
இறப்பு | பெப்ரவரி 20, 2012 சென்னை, தமிழ்நாடு |
நடிப்புக் காலம் | 1960 - 2000 பின்னர் தொலைக்காட்சித்தொடர்களில் |
துணைவர் | மணமாகாதவர் |
எஸ். என். லட்சுமி (1934 - பெப்ரவரி 20, 2012) முதுபெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை. 1948 ஆம் ஆண்டில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய லட்சுமி இருநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களிலும், ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்தவர். இறுதிக் காலங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றவர்.
விருதுநகர் மாவட்டம் , விருதுநகர் வட்டம் செந்நெல்குடி அருகே உள்ள பொட்டல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த[2] எஸ். என். லட்சுமி ஆறு வயது முதல் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து திரைப்படத்துறைக்கு வந்தவர். சர்வர் சுந்தரம், துலாபாரம், மைக்கேல் மதன காமராஜன், மகாநதி, விருமாண்டி எனப் பல படங்களில் குணசித்திர நடிகையாக நடித்துப் புகழ் பெற்றவர். இறக்கும் போது "தென்றல்" , சரவணன் மீனாட்சி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார்.
லட்சுமியின் தாய் பழனியம்மாள் எட்டு சிறுவர்களுடன் தனது சிற்றூரை விட்டு வெளியேறி விருதுநகரில் வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். மகன்கள் கல் உடைத்தும் மகள்கள் மாவரைத்தும் பிழைத்து வந்தார்கள். இந்நிலையில் வீட்டின் கடைசிப் பெண்ணான லட்சுமி குடும்பத்தைத் துறந்து நல்வாழ்க்கை தேடி சென்னைக்குப் பயணமானார்.[1] அங்கு மிகுந்த முயற்சிகளிடையே சந்திரலேகா திரைப்படத்தில் குழு நடனமொன்றில் பங்கேற்றார். அங்கிருந்து எஸ். வி. சகஸ்ரநாமம் வழிகாட்டுதலில் சேவா ஸ்டேஜ் நாடகக்குழுவில் நடித்து வந்தார். பின்னர் கே. பாலச்சந்தரின் ராகினி ரிக்கிரியேசன்ஸ் நாடகக்குழுவில் இணைந்தார். 1959 ஆம் ஆண்டில் வெளிவந்த தாமரைக்குளம் திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் திரையுலகில் நுழைந்தார். பாக்தாத் திருடன் திரைப்படத்தில் புலியுடனான சண்டைக் காட்சியில் நடித்து துணிகரமானப் பெண்மணி என்ற பெயர் பெற்றார்.[1]
தமிழக அரசின் வரிவிலக்கு ஆய்வுக்குழு உறுப்பினராகவும் மாநில தொலைக்காட்சி விருதுகள் நடுவர் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.[1]
திருமணம் ஆகாத லட்சுமி பல இடங்களுக்கும் தானே தனது சிற்றுந்தியை ஓட்டிக்கொண்டுச் செல்வார்.[1] சென்னையில் சாலிகிராமத்தில் வசித்து வந்தார்.