எஸ். எஸ். ராஜேந்திரன் | |
---|---|
பிறப்பு | சேடபட்டி சூரியநாராயண தேவர் இராசேந்திரன் சனவரி 1928 சேடப்பட்டி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 24 அக்டோபர் 2014 சென்னை | (அகவை 85–86)
மற்ற பெயர்கள் | எஸ். எஸ். ஆர், இலட்சிய நடிகர் |
பணி | நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி |
செயற்பாட்டுக் காலம் | 1952 முதல் 1980கள் வரை |
வாழ்க்கைத் துணை |
|
எஸ். எஸ். ஆர். (S. S. R) அல்லது எஸ். எஸ். ராஜேந்திரன் (S. S. Rajendran) என அழைக்கப்படும் சேடபட்டி சூரியநாராயண தேவர் இராஜேந்திரன் (சனவரி 1928 - அக்டோபர் 24, 2014[1]) தமிழகத் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும், பாடலாசிரியரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார்.[2] இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர். 1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் தனது அழகு, அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு ஆகியவற்றால் புகழ்பெற்று விளங்கினார். சுமார் 85 படங்களில் நடித்தார்.[3] இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன. 1962 ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனது தன்வரலாற்றை நான் வந்த பாதை என்னும் பெயரில் நூலாக எழுதியிருக்கிறார்.[3]
சே. சூ. இராசேந்திரன் சேடபட்டியில் தொடக்கக் கல்வியை முடித்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்க அடுத்துள்ள நகரப் பள்ளிக்குப் போக வேண்டும். குறைந்த வயதுடையவராக இராசேந்திரன் ஓராண்டு வீட்டிலேயே இருந்தார். அப்பொழுது அவர் தந்தைக்கு நண்பரான சுப்பு ரெட்டியார் என்பவரின் நாடகக் குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.[4] அந்த நாடகக் குழு ஆறுமாத பயணமாக நடகம் போட மலேசியாவுக்கு செல்லவிருப்பதை அறிந்த இராசேர்திரனின் தந்தை இராசேந்திரனை மீண்டும் படிக்கவைக்க நாடகக் குழுவிலிருந்து அழைத்து வந்துவிட்டார். பின்னர் வத்தலக்குண்டில் இருந்த உறைவிடப் பள்ளியான ஏ.எம். சி.சி. உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டார். இராசேந்திரன் அங்கேய தங்கி படித்துவந்தார். பள்ளிகளுக்கு இடையில் நடந்த நாடகப் போட்டியில் இவர் நடித்த சிந்தாமணி நாடகம் முதல் பரிசுபெற்றது. இதற்கிடையில் இராசேந்திரனுக்கு உள்ள குரல் வளம், நல்ல தோற்றம், நினைவுத் திறன், இசையறிவு போன்றவற்றைப் பார்த்த பள்ளி விடுதி காப்பாளர் மதுரையில் நாடகங்களை நடத்த வந்துள்ள பால ஷண்முகானந்த சபாவில் சென்று இணைந்து கொள்ளுமாறு தூண்டிவிட்டார். மேலும் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பியும்விட்டார்.
பின்னர், 'பாய்ஸ் நாடகக் கம்பெனி"யில் குழந்தை நடிகராகச் சேர்ந்தார். பின்னர் தி. க. சண்முகம் சகோதரர்களின் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபாவில் துணை நடிகராக நுழைந்து கதாநாயகனாக உயர்ந்தார்.[3] பின்னர் அக்குழுவில் இருந்து வெளியேறினார்.
ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த சே.சூ.இராஜேந்திரன், ஜி. இராமநாதனின் இசையமைப்பில் பின்னணிப்பாடகராக திரையுலகில் நுழைந்தார்.[3] கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் கருணாநிதியின் அம்மையப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஏரிக்கரை மீது போறவளே பெண்மயிலே.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1958-இல் இவர் நடித்த “தை பிறந்தால் வழி பிறக்கும்“ வெற்றிகரமாக ஓடியது.
எம்.ஜி.ஆருடன் சிறந்த நட்பினைப் பேணி வந்தார். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
சாரதா என்னும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை கே. எஸ். கோபாலகிருட்டிணனுக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.[2]
திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலும் நாடகத்தின் தொடர்பை சே.சூ.இரா. விட்டுவிடவில்லை. எஸ்.எஸ்.ஆர்.நாடக சபா என்னும் அமைப்பின் வழியாக பல நாடகங்களை நடத்தினார். அதன் வழியாக பின்னாளில் திரைவுலகில் புகழ்பெற்ற மனோரமா, ஷீலா ஆகியோரை நடிகர்களாக அறிமுகம் செய்தார்.[2]
சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் 1982ஆம் ஆண்டில் இரட்டை மனிதன் என்னும் படத்தில் நடித்தார். அதன் பின்னர் சில படங்களில் கெளரவ வேடமிட்டார். ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்த சே.சூ.இரா., அக்கழகத்தின் கொள்கைப்படி புராணப்படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டார்.
சே.சூ. இரா. தனது ராஜேந்திரன் பிக்சர்ஸ், எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் வழியாக முத்துமண்டபம், தங்கரத்தினம், மணிமகுடம், அல்லி ஆகிய படங்களைத் தயாரித்தார். முத்துமண்டபம் படத்தில் கே. ஆர். விஜயாவை அறிமுகம் செய்தார். அதேபோல மனோரமாவை தனது நாடக குழுவில் அறிமுகம் செய்தார்.[2]
சே.சூ.இராசேந்திரன் தானே கதைத்தலைவனாக நடித்து தங்கரத்தினம் (1960), மணிமகுடம், அல்லி ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.[5]
சே. சூ. இரா. திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கியபொழுது எஸ். எஸ். ஆர். நாடக மன்றம் என்னும் நாடக நிறுவனத்தின் உரிமையாளாராக இருந்தார். அந்நிறுவனத்தில் நடிகர்களாக இருந்த மனோரம்மா, ஷீலா ஆகியோர் பின்னாளில் புகழ்பெற்ற திரைப்பட நடிகர்களாக விளங்கினார்கள்.[2]
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழியாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இராசேந்திரன் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். 1958 ஆம் ஆண்டில் தி.மு.க. அறிவித்த பிரதமர் நேருவிற்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தின் பொழுது முன்னெச்சரிகை நடவடிக்கையாக சே. சூ. இரா. கைதுசெய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.[4] 1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் 12 நாள்கள் அடைக்கப்பட்டார்.[6]
1962 இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்பட நடிகர் இவராவார்.[7][8] நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக திமுக-வின் சார்பில் 1970 ஏப்ரல் 3 ஆம் நாள் முதல் 1976 ஏப்ரல் 2 வரை பணியாற்றினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தி.மு.க.விலிருந்து விலகி ம. கோ. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) தொடங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார். அக்கட்சியின் சார்பாக 1980 இல் போட்டியிட்டு ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வேறுபாட்டில் இவர் வென்றார்.[4] 1980ஆம் ஆண்டில் சிறுசேமிப்பு கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டில் ம.கோ.இரா. மருத்துவமனையில் இருந்த பொழுது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அக்கட்சியில் இருந்து பிரிந்துசென்று எம்.ஜி.ஆர்.எஸ்.எஸ்.ஆர்.கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.[4] ம.கோ.இரா. நலம்பெற்ற பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். ம.கோ.இரா. மறைவிற்கு பின்னர் 1989ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க.(ஜெயலலிதா அணி) சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.[3] அதன் பின்னர் சு. திருநாவுக்கரசு தொடங்கிய எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். சிறிதுகாலம் கழித்து அதிலிருந்து விலகி அரசியலில் இருந்தே ஒதுங்கினார்.
சூரிய நாராயண தேவர் - ஆதிலட்சுமி இணையர் மகனான சே.சூ.இராசேந்திரன் நாடகத்தில் தன்னோடு இணைந்து நடித்த கேரளத்தைச் சேர்ந்த பங்கசம் என்பவரை கவிஞர் பாரதிதாசன் தலைமையில் திருச்சி திருவரங்கத்தில் 1-12-1946ஆம் நாள் மணந்துகொண்டார்.[9] அவர்களுக்கு இளங்கோவன், ராஜேந்திர குமார், கலைவாணன், செல்வராஜ் என்னும் நான்கு மகன்களும் பாக்யலட்சுமி என்னும் மகளும் பிறந்தனர்.[10]
1956ஆம் ஆண்டில் குலதெய்வம் படத்தில் தன்னோடு இணைந்து நடித்த சி.ஆர். விசயகுமாரியை அவ்வாண்டிலேயே களவுத் திருமணம் செய்துகொண்டார். அத்திருமணம் சில ஆண்டுகளில் வெளியே தெரியவந்தது. இவர்களுக்கு ரவிக்குமார் என்னும் மகன் பிறந்தார். பின்னர் இருவரும் மனமொத்து மணவிலக்குப் பெற்றுக்கொண்டனர்.[2]
மூன்றாவதாக தாமரைச்செல்வி என்பவரை சே.சூ.இரா. மணந்துகொண்டார். இவர்களுக்கு கண்ணன் என்னும் மகனும் ஒரு மகளும் பிறந்தனர்.[10]
மார்புச் சளி, மூச்சடைப்பால் சிரமப்பட்ட எஸ்.எஸ்.ஆர் அக்டோபர் 24, 2014 காலை 11 மணிக்கு சென்னையில் காலமானார்.[11]
சே.சூ.இரா. பின்வரும் படங்களில் நடித்திருக்கிறார்:[12]
வ.எண். | ஆண்டு | திரைப்படம் | வேடம் | வேடத்தின் பெயர் | கதைத் தலைவி | இயக்குநர் | தயாரிப்பாளர் |
---|---|---|---|---|---|---|---|
01 | 1947.09.26 | பைத்தியக்காரன் | கிருஷ்ணன் - பஞ்சு | என். எஸ். கே. பிலிம்ஸ் | |||
02 | 1948 | ஸ்ரீ ஆண்டாள் | வேலுச்சாமி கவி | சேலம் சூரியா பிக்சர்ஸ் | |||
03 | 1952.10.17 | பராசக்தி | கதைத்தலைவரின் தம்பி | குணசேகரன் | கிருஷ்ணன் - பஞ்சு | நேஷனல் பிக்சர்ஸ் ஏ. வி. எம். புரோடக்சன்ஸ் | |
04 | 1952.12.27 | பணம் | என். எஸ். கிருஷ்ணன் | மெட்ராஸ் பிக்சர்ஸ் | |||
05 | 1954.03.03 | மனோகரா | கதைத்தலைவனின் நண்பன் | எல். வி. பிரசாத் | மனோகர் பிக்சர்ஸ் | ||
06 | 1954 | சொர்க்க வாசல் | கதைத்தலைவன் | முத்து மாணிக்கம் | அஞ்சலிதேவி பத்மினி |
ஏ. காசிலிங்கம் | பரிமளம் பிக்சர்ஸ் |
07 | 1954.09.24 | அம்மையப்பன் | ஜி.சகுந்தலா | ஏ. பீம்சிங் | நேஷனல் பிக்சர்ஸ் | ||
08 | 1954.10.25 | ரத்தக்கண்ணீர் | கதைத்தலைவனின் நண்பன் | பாலு | ஶ்ரீரஞ்சனி | கிருஷ்ணன் - பஞ்சு | மனோகர் பிக்சர்ஸ் |
09 | 1956.02.25 | ராஜா ராணி | ஏ. பீம்சிங் | நேஷனல் பிக்சர்ஸ் | |||
10 | 1956.09.29 | குலதெய்வம் | கதைத்தலைவன் | விஜயகுமாரி | கிருஷ்ணன் - பஞ்சு | எஸ். கே. பிக்சர்ஸ் | |
11 | 1956.11.01 | ரங்கோன் ராதா | ஏ. காசிலிங்கம் | மேகலா பிக்சர்ஸ் | |||
12 | 1957.10.22 | முதலாளி | கதைத்தலைவன் | தேவிகா | முக்தா வி. சீனிவாசன் | எம். ஏ. வி. பிக்சர்ஸ் | |
13 | 1957 | புதுவயல் | மைனாவதி | கிருஷ்ணன்-பஞ்சு | |||
14 | 1958.01.14 | தை பிறந்தால் வழி பிறக்கும் | ராஜசுலோச்சனா | ஏ. கே. வேலன் | அருணாசலம் பிக்சர்ஸ் | ||
15 | 1958.05.30 | பிள்ளைக் கனியமுது | ஈ. வி. சரோஜா | எம். ஏ. திருமுகம் | பி. எஸ். வி. பிக்சர்ஸ் | ||
16 | 1958.05.30 | பெற்ற மகனை விற்ற அன்னை | பண்டரிபாய் | வி. ராமநாதன் | மாடர்ன் பிக்சர்ஸ் | ||
17 | 1958.07.16 | தேடிவந்த செல்வம் | பி. சரோஜாதேவி | ப. நீலகண்டன் | அரசு பிக்சர்ஸ் | ||
18 | 1958.12.12 | அன்பு எங்கே | தேவிகா | டி. யோகநாத் | ஜுப்ளி பிலிம்ஸ் | ||
19 | 1958 | பெரிய கோவில் | ராஜசுலோச்சனா | ஏ. கே. வேலன் | அருணாசலம் பிக்சர்ஸ் | ||
20 | 1959.02.14 | கூடி வாழ்ந்தால் கோடி நன்மை | பி. சரோஜாதேவி | டி. எஸ். இராஜகோபாலன் | நர்சுஸ் ஸ்டூடியோ | ||
21 | 1959.04.23 | கல்யாணிக்கு கல்யாணம் | எம். என். ராஜம் | ஏ. எஸ். ஏ. சாமி | மனோகர் பிக்சர்ஸ் | ||
22 | 1959.05.19 | சிவகங்கைச் சீமை | போர்வீரன் | முத்தழகு | கே. சங்கர் | கண்ணதாசன் புரோடக்சன்ஸ் | |
23 | 1959.06.26 | புதுமைப்பெண் | ராஜசுலோசனா | எம். திருவேங்கடம் | ஶ்ரீகஜலெட்சுமி பிக்சர்ஸ் | ||
24 | 1959.07.10 | பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் | பி. சரோஜாதேவி | ஏ. பீம்சிங் | சாவித்திரி பிக்சர்ஸ் | ||
25 | 1959.07.17 | நாட்டுக்கொரு நல்லவள் | விஜயகுமாரி | கே. தசரத ராமையா | மெஜஸ்டிக் பிக்சர்ஸ் | ||
26 | 1959.10.31 | பாஞ்சாலி | தேவிகா | வி. ஶ்ரீனிவாசன் | எம். ஏ. வி. பிக்சர்ஸ் | ||
27 | 1959 | தலை கொடுத்தான் தம்பி | மாலினி | டி. ஆர். சுந்தரம் | மாடர்ன் தியேட்டர்ஸ் | ||
28 | 1959 | அல்லி பெற்ற பிள்ளை | ராஜசுலோச்சனா எம். என். ராஜம் |
கே. சோமு | எம். எம். புரோடக்சன்ஸ் | ||
29 | 1959 | சொல்லு தம்பி சொல்லு | மைனாவதி | டி. வி. சுந்தரம் | டி. வி. எஸ். புரோடக்சன்ஸ் | ||
30 | 1959 | மாமியார் மெச்சின மருமகள் | எம். என். ராஜம் | கிருஷ்ணன் - பஞ்சு | ஏ. வி. எம். புரோடக்சன்ஸ் | ||
31 | 1959 | ஓடி விளையாடு பாப்பா | சரோஜாதேவி | முக்தா சீனிவாசன் | ஜெகஜோதி பிலிம்ஸ் | ||
32 | 1959.12.11 | சகோதரி | தேவிகா | ஏ. பீம்சிங் | ஏ. வி. எம். புரோடக்சன்ஸ் | ||
33 | 1960.04.13 | தெய்வப்பிறவி | கிருஷ்ணன் - பஞ்சு | கமல் பிரதர்ஸ் | |||
34 | 1960.05.27 | சங்கிலித்தேவன் | ராஜசுலோச்சனா | பி. ஆர். பந்துலு | ஏ. எல். எஸ். புரோடக்சன்ஸ் | ||
35 | 1960.09.02 | ராஜா தேசிங்கு | கதைத்தலைவனின் நண்பன் | பத்மினி | டி. ஆர். ரகுநாத் | கிருஷ்ண பிலிம்ஸ் | |
36 | 1960.10.19 | பெற்ற மனம் | ஏ. பீம்சிங் | நேஷனல் பிக்சர்ஸ் | |||
37 | 1960.11.25 | தங்கரத்தினம் | விஜயகுமாரி | எம். ஏ. திருமுகம் | ராஜேந்திரன் பிக்சர்ஸ் | ||
38 | 1960 | பொன்னிர் திருநாள் | ஏ. கே. வேலன் | அருணாசலம் பிக்சர்ஸ் | |||
39 | 1960 | தங்கம் மனசு தங்கம் | ராஜசுலோசனா | ஆர். எம். கிருஷ்ணமூர்த்தி | பிராண்ட் பிக்சர்ஸ் | ||
40 | 1961.04.27 | மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே | எம். என். ராஜம் | கிருஷ்ணன் - பஞ்சு | அனுபமா பிலிம்ஸ் | ||
41 | 1961.07.29 | குமுதம் | விஜயகுமாரி | ஏ. சுப்பாராவ் | மாடர்ன் தியேட்டர்ஸ் | ||
42 | 1961.11.7 | பணம் பந்தியிலே | விஜயகுமாரி | கிருஷ்ணராவ் | எம். ஏ. வி. பிக்சர்ஸ் | ||
43 | 1961 | முத்துப்பந்தல் | பி. சரோஜா தேவி | வி. என். ரெட்டி | ஆர். ஆர். பிக்சர்ஸ் | ||
44 | 1962.03.16 | சாரதா | விஜயகுமாரி | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் | ஏ. எல். எஸ். புரோடக்சன்ஸ் | ||
45 | 1962.09.14 | செந்தாமரை | ஏ. பீம்சிங் | மெட்ராஸ் பிக்சர்ஸ் | |||
46 | 1962.11.23 | ஆலயமணி | பி. சரோஜாதேவி | கே. சங்கர் | பி. எஸ். வி. பிக்சர்ஸ் | ||
47 | 1962 | எதையும் தாங்கும் இதயம் | விஜயகுமார் செளகார் ஜானகி |
ப. நீலகண்டன் | உதயசூரிய புரோடக்சன்ஸ் | ||
48 | 1962 | முத்து மண்டபம் | விஜயகுமாரி | ஏ. எஸ். ஏ. சாமி | ராஜேந்திரன் பிக்சர்ஸ் | ||
49 | 1962 | தெய்வத்தின் தெய்வம் | விஜயகுமாரி | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் | சித்ரா புரோடக்சன்ஸ் | ||
50 | 1963.03.09 | வானம்பாடி | தேவிகா | ஜி. ஆர். நாதன் | கண்ணதாசன் புரோடக்சன்ஸ் | ||
51 | 1963.03.15 | நீங்காத நினைவு | விஜயகுமாரி | டி. ஆர். ரகுநாத் | பத்மா பிலிம்ஸ் | ||
52 | 1963.04.12 | காட்டு ரோஜா | பத்மினி | ஏ. சுப்பராவ் | மாடர்ன் தியேட்டர்ஸ் | ||
53 | 1963.06.06 | நானும் ஒரு பெண் | விஜயகுமாரி | ஏ. சி. திருலோகச்சந்தர் | ஏ.வி.எம்.புரோடக்சன்ஸ் | ||
54 | 1963.08.02 | குங்குமம் | விஜயகுமாரி | கிருஷ்ணன் - பஞ்சு | ராஜாமணி பிக்சர்ஸ் | ||
55 | 1963.10.26 | காஞ்சித் தலைவன் | விஜயகுமாரி | ஏ. காசிலிங்கம் | மேகலா பிக்சர்ஸ் | ||
56 | 1963.11.15 | ஆசை அலைகள் | விஜயகுமாரி | ஏ. எஸ். ஏ. சாமி | பூங்காவனம் பிக்சர்ஸ் | ||
57 | 1963.12.25 | கைதியின் காதலி | விஜயகுமாரி | ஏ. கே. வேலன் | அருணாசலம் பிக்சர்ஸ் | ||
58 | 1963 | வீரத் தளபதி வேலுதம்பி | ஜி. விசுவநாதன் | ||||
59 | 1964 | பூம்புகார் | கதைத்தலைவன் | கோவலன் | விஜயகுமாரி | ப. நீலகண்டன் | மேகலா பிக்சர்ஸ் |
60 | 1964.04.03 | பச்சை விளக்கு | விஜயகுமாரி | ஏ. பீம்சிங் | வேல் பிக்சர்ஸ் | ||
61 | 1964.07.18 | கை கொடுத்த தெய்வம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் | ஶ்ரீ பொன்னி புரோடக்ஷன்ஸ் | |||
62 | 1964.08.22 | வழி பிறந்தது | விஜயகுமாரி | ஏ. எஸ். ஏ. சாமி | ஏ. கே. வேலன் பிக்சர்ஸ் | ||
63 | 1964.11.03 | உல்லாச பயணம் | விஜயகுமாரி | சத்யம் | சேலம் மூவிஸ் | ||
64 | 1964 | அல்லி | விஜயகுமாரி | எஸ். எஸ். ராஜேந்திரன் | எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ் | ||
65 | 1965.01.15 | பழநி | ஏ. பீம்சிங் | பாரதமாதா பிக்சர்ஸ் | |||
66 | 1965.04.22 | சாந்தி | விஜயகுமாரி | ஏ. பீம்சிங் | ஏ. எல். எஸ். புரோடக்ஷன்ஸ் | ||
67 | 1965.06.04 | படித்த மனைவி | கதைத்தலைவன் | விஜயகுமாரி | கிருஷ்ணசாமி | பாலா மூவிஸ் | |
68 | 1965.06.19 | காக்கும் கரங்கள் | விஜயகுமாரி | ஏ. சி. திருலோகச்சந்தர் | ஏ.வி.எம்.புரோடக்சன்ஸ் | ||
69 | 1965.07.17 | வழிகாட்டி | கே. பெருமாள் | கனகா மூவிஸ் | |||
70 | 1965.10.23 | பூமாலை | விஜயகுமாரி | ப. நீலகண்டன் | மேகலா பிக்சர்ஸ் | ||
71 | 1965.11.19 | மகனே கேள் | புஷ்பலதா | வி. ஸ்ரீநிவாசன் | நாவல் பிலிம்ஸ் | ||
72 | 1965.12.25 | ஆனந்தி | விஜயகுமாரி | ப. நீலகண்டன் | ஏ. எல். எஸ். புரோடக்ஷன்ஸ் | ||
73 | 1966.04.29 | அவன் பித்தனா | விஜயகுமாரி | ப. நீலகண்டன் | ஏ. எல். எஸ். புரோடக்ஷன்ஸ் | ||
74 | 1966.06.18 | தேடிவந்த திருமகள் | விஜயகுமாரி | சத்யம் | ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ் | ||
75 | 1966.08.12 | மறக்க முடியுமா | கதைத்தலைவன் | தேவிகா | முரசொலி மாறன் | மேகலா பிக்சர்ஸ் | |
76 | 1966.12.09 | மணிமகுடம் | விஜயகுமாரி ஜெ. ஜெயலலிதா |
எஸ். எஸ். ராஜேந்திரன் | எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ் | ||
77 | 1969 | பெண்ணை வாழ விடுங்கள் | விஜயகுமாரி | தேவராசன் | விஜய சித்ரா பிலிம்ஸ் | ||
78 | 1982 | இரட்டை மனிதன் | லதா | கே. சங்கர் | மருதுபாண்டியன் பிக்சர்ஸ் | ||
79 | 1985.05.17 | அன்பின் முகவரி | மணிவண்ணன் | ஶ்ரீமீனாட்சி புரோடக்ஷன் | |||
80 | 1996.04.17 | ராஜாளி | வேலு பிரபாகரன் | மதர்லாண்ட் மூவிஸ் இன்டர்நேஷனல் | |||
81 | 1998.07.09 | தர்மா | முதலமைச்சர் | கேயார் | ராவுத்தர் பிலிம்ஸ் | ||
82 | 2000.04.14 | வல்லரசு | என். மகாராஜன் | கேப்டன் சினி கிரியேசன்ஸ் | |||
83 | 2001.02.16 | ரிஷி | முதலமைச்சர் | சுந்தர் சி | பி. ஏ. ஆர்ட் புரோடக்ஷன்ஸ் | ||
84 | 2003 | தம் | ஏ. வெங்கடேஷ் | ராக்லைன் புரோடக்ஷன்ஸ் |