குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) என்பது இந்தியாவில், பிரித்தானிய ஆட்சியின் பொழுது வேறுபட்ட காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் ஆகும். இது முதன் முதலாக 1871 இல் இயற்றப்பட்டது. இது பெரும்பாலும் வட இந்திய சமூகத்தினரையே அதிக அளவில் குறிவைத்து உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். பின்னாளில் இது வங்க மாகாணத்திற்கும் 1876 இல் அமுல்படுத்தபட்டது. கடைசியாக 1911 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்திற்கு இது அமுல்படுத்தபட்டது. இந்தச் சட்டமானது இயற்றப்பட்ட நாளில் இருந்தே பல சட்டத்திருத்தங்களுக்கு உள்ளாகி பின்னர் கடைசியாகக் குற்றப் பரம்பரை சட்டம் (1924 ஆம் ஆண்டின் VI வது திருத்தம்) என்று இந்தியா முழுவதும் அமலாகியது.
இந்தியாவிற்கான ஆளுநரின் அதிகாரத்தின் கீழ்படியாக அக்டோபர் 12 ஆம் நாள் 1871 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் இந்தியாவில் திருட்டு தொழில் செய்யும் சில சமுதாய மக்களின் மீது விதிக்கப்பட்டது. இது இந்திய மக்களின் மீது குறிப்பிட்ட திருட்டு சமூகத்தினரை ஒடுக்கவும், அவர்கள் மீது திருட்டு போன்ற குற்றங்களைக் காரணம் காட்டி அவர்களைப் பிணையில் வெளிவர முடியாதபடிக்கு சிறையில் அரசாங்கம் விரும்பும் வரைக்கும் சிறையில் அடைத்து வைப்பதற்குமாக உருவாக்கப்பட்டதாகும். இதில் உள்ளடங்கும் சமூகத்தினர் குற்றம் புரிவதை வாடிக்கையாகக் கொண்ட பிரிவினர் என்று இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ்வரும் சமூகத்தினை சேர்ந்த குழந்தைகள் அல்லாத ஆண்கள் அனைவரும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் வாரமொருமுறை தங்களது இருப்பினை பதிவு செய்யும்படிக்கு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இந்திய சுதந்திரத்தின் பொழுது 127 வெவ்வேறு சமூகத்தினை சேர்ந்த பதிமூன்று மில்லியன் எண்ணிக்கை அளவிலான இந்திய மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சமூகத்தினருக்கு சொந்தமான இடத்தில் அரசானது தேடுதல் நடத்துவதோ அல்லது அவர்களைக் கைது செய்வதற்கோ எந்தவித பிடியாணையும் இல்லாமல் இந்தச் சட்டத்தின் பெயரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு அதிகாரம் உண்டு. இந்தச் சட்டத்தின் கடுமை தாக்கத்தின் விளைவாக இந்தச் சட்டமானது 1949 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிடியில் இருந்த சமூகத்தினர் குற்ற பரம்பரை என்ற பெயரிலிருந்து குற்ற மரபினர் பட்டியலில் நீக்கப்பட்டவர் என்று அழைக்கப்பட்டனர். மேலும் சீர்மரபினர் என்றும் அழைக்கப்பட்டனர். பின்னர் இந்தச் சட்டத்தின் பெயரில் அடைக்கப்பட்டிருந்தவர்களை இந்திய மாநில அரசுகள் 1961 ஆம் ஆண்டில் முழுமையாக விடுவித்தது.
இந்தச் சமூகத்தினரில் அதிகப்படியான 60 மில்லியன் எண்ணிக்கையிலான மக்கள் இவர்கள் மீதான சட்டக்கடுமைகள் விலக்கப்பட்ட பின்பும் காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இன்று நாடோடிகள் பழங்குடியினரை சேர்ந்த 313 சமூக பிரிவினரும் 198 பட்டியலில் நீக்கப்பட்ட மற்ற சீர்மரபினரும் இந்தியாவில் இருக்கின்றனர். இந்தச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பல சமூகத்தினரின் அடையாளங்கள் மாறிவிட்டபோதிலும் இன்றும் கூட அந்தப் பிரிவில் சில சமூகத்தினர் விமுக்த சாதியினர் (Denotified tribes of India) என்று அழைக்கப்படுகின்றனர்.
19ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பரவலாக, வங்காளத்தில் குறிப்பாகப் பெருகிவந்த குற்றங்களை அப்போதைய ஆங்கில அரசு ஆராயத் தொடங்கியது. குற்றங்களின் தன்மை, இடம், எண்ணிக்கை, குற்றவாளிகளின் குணாதிசியங்கள், அவர்களுக்கு இடையே ஆன தொடர்புகள், ஒற்றுமைகள் ஆகியவற்றை ஆங்கிலேயர் கவனமாகக் குறிப்பெடுத்தனர். பல மாறுபட்ட தேசிய மொழிவாரி இனங்களின் கூட்டுக்கலவையாக விளங்கிய இந்தியா அவர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. இருப்பினும் தங்களின் ஆராய்ச்சி முடிவில் தக்கீ (Thuggee/Thug) போன்ற குறிப்பிட்ட சில இன மக்கள் குற்றங்களின் முக்கிய காரணியாக இருப்பதை கண்டுபிடித்தனர். தக்கீ இன மக்கள் நாடோடி கொள்ளையர்களாக 17, 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தனர். வியாபாரிகள், அதிலும் குறிப்பாக நெடுந்தொலைவு நடந்தும், குதிரையிலும் செல்லும் வியாபாரிகளே இவர்களின் முக்கிய இலக்காயினர். கொள்ளைக்கு இடையூறாய் உரிமைதாரர் இருப்பதால், பெரும்பாலும் கொலையும் களவின் ஒரு பகுதியாகவே போனது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைத் தக்கீயர் கொன்றிருப்பதாகக் கின்னஸ் புத்தகம் கூறுகிறது.
பெரும்பான்மை மக்களிடமிருந்து விலகிக் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த இவர்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவை சராசரி மக்களை விட்டு வேறுபட்டு நின்றது. சீக்கிய திருடர்கள், இசுலாமிய திருடர்கள் ஆகியோர் இருந்தபோதும் இந்து திருடர்களே அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.
கொள்ளையை ஒழிக்கும் அளவுக்குப் பொறுமையோ, அவகாசமோ, ஆர்வமோ இல்லாத ஆங்கிலேயர் கொள்ளையர்களை ஒழிக்க முடிவுசெய்தனர். வில்லியம் ஸ்லீமன் (William Sleeman)தலைமையிலான “Thuggee and Dacoity Department” ஆயிரக்கணக்கான தக்கீ இனத்தாரை தூக்கிலிட்டும், நாடு கடத்தியும், வாழ்நாள் சிறை தண்டனை விதித்தும் வங்காளத்தை சுற்றி வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுபுள்ளி வைத்தனர். குறிப்பாக 1835 முதல் 1850 வரை சுமார் 3000க்கும் மேற்பட்ட தக்கீகள் நசுக்கப்பட்டனர்.
அடக்குமுறை வெற்றியடைந்ததை ஒட்டி நாடு முழுவதும் குற்றங்களைக் குறைக்கவும், தடுக்கவும் இதே முறை கொண்டு வருவதாகத் தீர்மானம் நிறைவேறியது. இதன் சட்ட வடிவமே “குற்றப் பரம்பரையினர் சட்டம்” (Criminal Tribes Act 1871).இதை கொண்டுவந்த நீதிபதி ஜேம்சு ஸ்டீபன் (James F. Stephen), இந்தச் சட்டத்தின் சாராம்சமாக முன்மொழிந்த கூற்று,
இப்படியாக முன்மொழியப்பட்ட சட்டம் பின்னாளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு கோடிகணக்கான அப்பாவி மக்களை “பிறவிக் குற்றவாளிகளாக” அடையாளப்படுத்தி சமூக நீதிக்கெதிராகக் குற்றம் சாட்ட வழி வகுத்தது.
18 ஆம் நூற்றாண்டில் வங்காளத்தை நிருவகித்து வந்த வாரன் ஹேஸ்டிங் உப்பு வணிகத்தை முழுவதும் கிழக்கிந்திய நிறுவனம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இதனால் உப்பு கொண்டு செல்லப்படும் வழிகள் அடையாளம் காணப்பட்டு வழிகள் அடைக்கப்பட்டன. தலைச்சுமையாக உப்பு கொண்டு செல்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பாரம்பரியமாக இதில் ஈடுபட்டு வந்த நாடோடி இன மக்களான உப்புக் குறவர்களும், தெலுங்கு பேசும் எருகுலரும், கொரச்சர்களும் தடையை மீறி உப்பைக் கடத்தி விற்க முற்பட்டார்கள். இதே போன்று லம்பாடிகள், பஞ்ஞாராக்கள் ஆகியோர் காலனியக் கட்டுப்பாடுகளை மீறி உப்பைப் பிற மாநிலங்களில் விற்றார்கள். இவர்களைத் தடுக்க வன்முறையை ஏவி விட்டதோடு இவர்களைத் திருடர்கள் எனக் குற்றம் சாட்டிய ஆங்கிலேய அரசு இவர்களையும் குற்றப்பரம்பரையில் சேர்த்தது.[1]
ஆரம்ப காலகட்டங்களில் இந்தச் சட்டமானது தெற்காசியாவில் குறிப்பாக வடஇந்திய பகுதிகளில் வாழ்ந்த தக்கி எனப்படும் கொலை மற்றும் வழிப்பறியை தொழிலாகக் கொண்ட சமூகத்தினரை எதிர் கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டது. 1857களில் அந்தச் சட்டமானது புரட்சி செய்யும் குழுக்களையும் இதன் வரம்பிற்குள் அடக்கி அவர்கள் மீதும் பாய்ந்தது. இதன்மூலமாகப் பல்வேறு பழங்குடி தலைவர்கள் மீது துரோக குற்றம் சாட்டி துன்புறுத்தி வந்தமையினால் புரட்சி செய்யும் அனைவருக்கும் எதிராகப் பாயும் சட்டமாக மாற்றிக் கையாளப்பட்டது.
தமிழ்நாட்டில் அம்பலக்காரர் வலையர், மறவர், பிரமலைக் கள்ளர், , கேப்மாரி என 89 சாதிகள் குற்றப் பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில் இருந்தன. சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். அதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர் போன்ற சாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.[2]
குற்றப் பரம்பரைப் பட்டியலில் கொண்டுவரப்பட்ட சாதி ஆண்கள் குறிப்பாக 16 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பில் இருக்கவேண்டும். அவர்களிடம் நாள்தோறும் கைரேகை பதிவு செய்யப்படும். மேற்கண்ட சாதிகளில் குறிப்பாகக் அம்பலகாரர் வலையர்,மறவர்,கள்ளர் போன்ற சில சமூகத்தினர் கைரேகைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டனர். விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை.
1921 ஆம் ஆண்டில் வலையர் அம்பலக்காரர்கள் மற்றும் கள்ளர்கள் தலைமையிலேயே கண்காணிப்பு கிராமங்களாக ‘கள்ளர் மற்றும் வலையர் அம்பலக்காரர் பஞ்சாயத்துக்கள்’ உருவாக்கப்பட்டன. உள்ளூரிலேயே அதே சாதியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் இடம் பெற்றிருந்த ஒரு குழுவிடம் ஒரு பதிவேடு இருக்கும். அதிலேயே கைரேகை வைக்கலாம். ஆனாலும் பல நேரங்களில் அவர்கள் காவல் நிலையத்தில் தூங்குமாறும், அருகே இருக்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அந்தக் குழுவிடம் அடையாளச் சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும். தாம் செல்லும் ஊரில் இருக்கும் ஊர்ப் பெரியவர் குழுவில் இந்த அடையாளச் சீட்டைக் காண்பிக்க வேண்டும். அடையாளச் சீட்டு இல்லாதவர்கள் கைது செய்யப்படுவார்கள். அடையாளச் சீட்டு இல்லாமல் அடிக்கடி கைதாகும் நபர்கள் தனியாகப் பட்டியலிடப்பட்டு அவர்கள் நேரடியாகக் காவல்நிலையத்தில் கைரேகை வைக்க வலியுறுத்தப்பட்டனர்.[3]
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல நேர்ந்தால், ‘ராத்திரிச் சீட்டு’ பெற்றுச் செல்லவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். (இந்தச் சீட்டில் வ.எண், பெயர், குற்றப்பதிவு எண், குற்றப் புலனாய்வுத் துறை, குழு எண், வெளியே போவதற்கான காரணம், செல்லும் வழித்தடம், நேரம், திரும்பும் நேரம், பெருவிரல் ரேகைப் பதிவு ஆகியவை இருந்தன). மூன்று பிரதிகளைக் கொண்ட இந்த ராத்திரிச் சீட்டின் முதல் படி உள்ளூர் காவல் நிலையத்திலும், இரண்டாவது படி அந்த நபர் செல்ல இருக்கும் காவல் நிலையத்துக்கும், மூன்றாவது படி அந்த நபரிடமும் தரப்பட்டது. வழியில் எங்காவது இரவு தங்க நேர்ந்தால், அந்தக் கிராமத்தின் தலைவனது கையொப்பம் பெறப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.[4]
1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் இச்சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 17 பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் மரணம் அடைந்தனர். இது குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்துத் தமிழ்நாட்டில் நடைபெற்ற மிக முக்கியப் போராட்டம் ஆகும்.
அதன் பிறகு 1921 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகக் கேரளாவைச் சேர்ந்தவரும் மதுரையில் குடியிருந்தவருமான ஜார்ஜ் ஜோசப் என்ற வழக்குரைஞர் முதன்முறையாகக் கள்ளர் நாடு முழுமைக்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களைத் திரட்டிக் குறிப்பாகக் குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கெதிராக மட்டுமே போராட்டங்களை முன்னெடுத்தார். இவரை அப்பகுதி கள்ளர்கள் அப்போது ‘ரோசாப்பூ துரை’ என்றே அழைத்தனர். அவரது நினைவாக, இன்று வரை குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டுகின்றனர்.
1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக் குழு முன்னிலையில் நடந்த விசாரணையில் அம்பேத்கர் இச்சட்டத்தின் கொடுமைகளையும் தீர்க்கும் வழிமுறைகளையும் குறித்து எடுத்துரைத்தார். இந்த விசாரணையில்தான் மிக முக்கியமாகக் குற்றப் பரம்பரைச் சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப் பரம்பரையினர்க்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ இந்திய அரசின் ஆளுநரைவிட அந்தந்த மாகாண அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை இந்திய அரசே பதிவுச் செய்தது.[3]
தமிழ்நாட்டில் செய்யூர் ஆதி திராவிடர் பேரவை, வன்னியகுல சத்திரிய சபா ஆகிய அமைப்புகள் போராடி அந்தந்த சாதிகளை பட்டியலில் இருந்து விடுவித்தன. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் என்பவர் தஞ்சை, திருச்சி மாவட்ட கள்ளர்களை குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து மீட்கப் போராடி வெற்றி பெற்றார். 1911-ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை நேரில் சந்தித்துப் பேசி குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து தஞ்சைப் பகுதி ஈச நாட்டுக் கள்ளர்களை மீட்டிருக்கிறார். இந்தப் போராட்டங்களுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அப்போது அவருக்கு வயது 3.
1927ம் ஆண்டு மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற பரம்பரைச் சட்டம் அமலில் இருந்து வந்தது. அக்காலத்தில் அரசியலில் ஈடுபட்ட மறவர் சமூகத்தை சார்ந்த முத்துராமலிங்கத் தேவர் இந்தச் சட்டத்தை நீக்குவதற்காக ஆதரவு திரட்டத் தொடங்கினார்.
இந்த நிலையில் 1929 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 19 கிராமங்களைச் சேர்ந்த மறவர் சமுதாயத்தினரை இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர். இதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார், முத்துராமலிங்கதேவர். இந்தச் சட்டத்திற்கு மறவர் சமுதாயத்தினர் யாரும் அடிபணிய வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவர்களும் போராட்டத்தில் குதிக்க அந்தச் சட்டத்தைப் பகுதியாக விலக்கிக் கொண்டது அப்போதைய சென்னை மாகாண அரசு. இவரின் தொடர் முயற்சிகளால் 2000 கிராம மறவர்கள், இந்தச் சட்டத்தின் கீழ் இருந்த நிலை மாறி 341 ஆகக் குறைந்தது.
குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மதுரை பிரமலைக் கள்ளர் மற்றும் வேப்பூர் பறையர் மக்களை தென்னார்க்காடு மாவட்டத்தில் அஜீஸ் நகர் செட்டிலெமென்ட் என்று உருவாக்கி ஆங்கிலேய அரசு இந்த மக்களை கொடுமைப்படுத்தியது. குற்றப்பரம்பரைச் சட்டத்தில் கைதாகி அசிஸ் நகர் செட்டிலெமென்ட்யில் அடைக்கப்பட்டு இருந்த மக்களுக்கு அடிப்படை வசதி, உணவு கூட இல்லாமல் இருந்த நிலையில் ஜம்புலிங்க முதலியார் அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான அடிப்படை உணவு மற்றும் வசதிகளை செய்து தந்தார். [5][6]
மேலும் தென் ஆற்காடு மாவட்டத்தில் படையாச்சி வன்னியர்[7][8] உள்ளிட்ட பல சமூகத்தின் மீதி போடப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி சில சமூகத்தின் மீது விதிக்கப்பட்ட சட்டத்தை திரும்பப் பெற வைத்தார் ஜம்புலிங்க முதலியார்.[9][10]
இப்படிச் சட்டத்தின் பெயரால் நடந்த இக்கொடுமைகளை எதிர்த்து, 1930களில் இருந்தே பல விவாதங்கள் நடந்தன. 1936ல் பண்டித ஜவஹர்லால் நேரு, ‘சட்டப் புத்தகத்திலிருந்து இந்தச் சட்டம் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என்றார். இதே போல, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு சுப்பராவ், ஹரிஜன சேவா சங்கத் தலைவர் கி.சி. தக்கா, ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் வலியுறுத்தினர். அதன் விளைவால், 1947-இல் காவல்துறை அமைச்சராக இருந்த பி. சுப்பாராவ், இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். பேகம் சுல்தான் அம்ருதீன் போன்றவர்களால் இதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டபோதும், தீர்மானம் நிறைவேறியது; சுதந்திரத்திற்குப் பிறகு தானாகவே காலாவதியானது.
{{cite book}}
: line feed character in |last1=
at position 12 (help)CS1 maint: multiple names: authors list (link)