சாயிட் அன்வர் | |
---|---|
பிறப்பு | 6 செப்டெம்பர் 1968 (அகவை 56) கராச்சி |
படித்த இடங்கள் |
|
சாயிட் அன்வர் (Saeed Anwarஉருது: سعید انور, செப்டம்பர் 6, 1968) பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆரம்பத்துடுப்பாளர் மற்றும் தலைவர் ஆவார். அன்வர் ஓர் இடதுகைத் துடுப்பாளர். கராச்சி அணி சார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய அன்வர் 1990 ஆம் ஆண்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக பைசலாபாத்தில் தன் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இவர் 189 முதல் 2003 ஆம் ஆண்டுகள் வரை சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பாக்கித்தானிய வீரர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 20 நூறுகள் அடித்துள்ளார். இதன்மூலம் அப்போது அதிக நூறுகள் அடித்த பாக்கித்தானிய வீரர்களில் முதலிடம் பிடித்தார்.[1][2] இவர் 55 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாஅடி 4052ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 11 நூறுகள் அடங்கும்.இவரின் சராசரி 45.52 ஆகும். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் 8842 ஓட்டங்களை 39.21 எனும் சராசரியில் எடுத்தார்.
1990 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். பின் 1994 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான 3 ஆவது துடுப்பாட்டப் போட்டியில் இவர் 169 ஓட்டங்கள் எடுத்தார். பின் 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்கமல் 188* ஓட்டங்கள் சேர்த்தார். இதன்மூலம் தேர்வுப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார், 1993-1994 ஆம் ஆண்டில் சார்ஜா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். மே 22, 1997 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கெதிரான போட்டியில் 147 பந்துவீச்சுக்களை எதிர்கொண்டு 194 ஓட்டங்களைப் பெற்றமையே அச்சாதனையாகும். அப்போது இதுவே ஒருநாள் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிக அளவு ஓட்டங்களாக இருந்தது. அதன் பின்னர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் இச்சாதனையை முறியடித்தனர். ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்களின் பட்டியலில் தற்போது இவர் ஆறாவது இடம் பிடித்துள்ளார்.[3][4].இவர் மூன்றுமுறை துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ளார். இவர் 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 தேர்வுப் போட்டிகளுக்கு தலைமை தாங்கினார். ஆகஸ்டு 2003 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார்.
சயீத் அன்வர் 6 செப்டம்பர் 1968 அன்று கராச்சியில் பிறந்தார். 1973 ஆம் ஆண்டில், இவர் தனது குடும்பத்தினருடன் கனடாவுக்குச் சென்றார். பின்னர் 1977 ஆம் ஆண்டில் இவர்கள் மீண்டும் கராச்சிக்கு வந்தனர். அன்வர் மாலிர் கான்ட் அறிவியல் கல்லூரியில், கராச்சியின் என்.இ.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். அங்கு கணினி பொறியியல் துறையில் 1989 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். இவர் ஒரு தொழில்முறை தேர்வுத் துடுப்பாட்ட வீரராக மாறுவதற்கு முன்பு தனது முதுகலைப் படிப்பிற்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார். தொழிலதிபரான இவரது தந்தை சங்கங்களுக்காக துடுப்பாட்ட விளையாடினார், அதே நேரத்தில் இவரது சகோதரர் ஜாவேத் அன்வர் லாகூரின் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [5] [6]
அன்வர் தனது உறவினர் மற்றும் மருத்துவரான லுப்னாவை மார்ச் 1996 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். [7] 2001 ஆம் ஆண்டில் இவரது மகள் பிஸ்மா, உடல்நலக் குறைவினால் இறந்தார். [8] [9] இதன் விளைவாக, இவர் மதம் மாறி, தப்லீக் ஜமாஅத்துடன் பாகிஸ்தான் முழுவதும் இஸ்லாத்தைப் பிரசங்கிக்கத் தொடங்கினார். [10] [11] இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு துடுப்பாட்டத்திற்குத் திரும்பினார் மற்றும் 2003 உலகக் கோப்பையில் மிகவும் எதிரபார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவராக இருந்தார். ஆனால், இயல்பான விளையாட்டுத் திறனை இவர் வெளிப்படுத்தத் தவறினார். இதற்காக இவர் விமர்சிக்கப்பட்டார்.இது விரைவில் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற வழிவகுத்தது. [12] இவரது தொழில் வாழ்க்கையில், இவர் ஒரு நேர்த்தியான மட்டையாளராக இருந்தார், குறிப்பாக வலதுபக்கத்தில் சிறப்பாக விளையாடினார். [13] லாகூரில் உள்ள தனது முன்னாள் அணி வீரர் வாசிம் அக்ரமின் துணைவியார் ஹுமா அக்ரமின் இறுதி ஊர்வலத்தில் இவர் தலைமை தாங்கினார். [14]
அன்வர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரு சிறந்த துவக்க வீரராக இருந்தார். [15] பாகிஸ்தானுக்காக 55 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய இவர் 45.52 எனும் சராசரியோடு 4052 ஓட்டங்கள் எடுத்தார். தேர்வுத் துடுப்பாட்டத்தில் பாகிஸ்தானுக்கு அதிக ஓட்டங்கள் எடுத்த ஏழாவது இடத்தில் உள்ள இவர், தனது சர்வதேச வாழ்க்கையில் 11 நூறுகளையும் 25 அரைநூறுகளையும் எடுத்துள்ளார். [16] ஆக்ரோசமாக விளையாடுபவராக அறியப்பட்டார்.[17] [18] இவர் சுற்றுப்பயணம் செய்த ஒவ்வொரு அணிக்கும் எதிராக நூறுகளை அடித்தார், மேலும் ஆசிய மட்டையாளர்களுக்கு மிகவும் கடினமாக இருந்த தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு நாடுகளில் மூன்று நாடுகளுக்கு எதிராக சராசரியாக 40 க்கும் மேற்பட்ட சராசரியை இவர் வைத்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எந்தவொரு பாகிஸ்தானியரையும் விட அதிக தேர்வுத் துடுப்பாட்ட மட்டையாடும் சராசரியை (59.06) வைத்துள்ளார்.ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு நூறுகளை அடித்தார். [19]
1990 ல் பைசலாபாத்தின் இக்பால் அரங்கத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி தோல்வியடைந்தது. கர்ட்லி ஆம்ப்ரோஸ் மற்றும் இயன் பிஷப் முறையே முதல் மற்றும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இவரை வீழ்த்தினர். [20] [21]
சனவரி 1989 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 3 ஓட்டங்களை எடுத்தார்.[22] டிசம்பர் 1989 ஆம் ஆண்டில் குஜ்ரன்வாலாவில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து பாக்கித்தான் அணி வெற்றி பெற உதவினார்.[23]
அன்வர் மொத்தம் 247 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் 8842 ஓட்டங்களை 39.21 எனும் சராசரியில் எடுத்தார்.[1] ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய வீரர்களில் இவர் மூன்றாமிடம் பிடித்துள்ளர். முதல் இரண்டு இடங்களில் இன்சமாம் உல் ஹக் மற்றும் முகம்மது யூசுப் ஆகியோர் உள்ளனர்.[24] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 20 நூறுகள் அடித்துள்ளார். இதன்மூலம் அப்போது அதிக நூறுகள் அடித்த பாக்கித்தானிய வீரர்களில் முதலிடம் பிடித்தார்.[2]