ஜார்ஜ் எட்வர்டு டேவிஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஈட்டன், இங்கிலாந்து | சூலை 27, 1850
இறப்பு | 1907 (அகவை 56–57) |
குடியுரிமை | இங்கிலாந்து |
துறை | வேதியியல் |
கல்வி கற்ற இடங்கள் | ராயல் சுரங்க பள்ளி |
அறியப்படுவது | வேதிப் பொறியியலின் தந்தை |
ஜார்ஜ் எட்வர்டு டேவிஸ் (George E.Davis, ஜூலை 27, 1850–1907) வேதிப் பொறியியலின் தந்தை என்று கருதப்படுகிறார்.
டேவிஸ் 1850 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஈட்டன் என்ற இடத்தில் புத்தக விற்பனையாளரான ஜார்ஜ் டேவிஸ் என்பவருக்கு மூத்த மகனாக பிறந்தார். வேதியியலின் மேல் உள்ள தீராத ஆர்வத்தினால் பதினான்காம் வயதில் உள்ளூரில் தான் பயின்று பயிற்சி செய்து வந்த புத்தக அட்டையிடும் தொழிலை இரண்டு ஆண்டுகளில் கைவிட்டார்.
உள்ளூரில் வாயுத் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டே சிலவ் இயந்திர இயக்கவியல் கல்லூரியில் (Slough Mechanics Institute) பயின்றார். பின்னர் ஓர் ஆண்டு காலம் ராயல் சுரங்க பள்ளியில் தற்சமயம் லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியில் (Imperial college, London) கல்வி கற்றார். படித்து முடித்த கையோடு இங்கிலாந்தின் பிரதான மையப்பகுதியான மேன்செஸ்டர் (Manchester) நகரில் இருந்த வேதி தொழிற்சாலையில் வேலையில் அமர்ந்தார்.
டேவிஸ் பேரெயர்லி நிறுவனத்தில் மூன்றாண்டு காலம் மருந்து விற்பனையாளராக பணிபுரிந்தார். அதன் பின்னர் 1863 ஆம் ஆண்டு கார சட்டத்தினை (Alkali Act of 1863) கண்காணிக்கும் அதிகாரியாக டேவிஸ் நியமிக்கப்பட்டார். கார சட்டத்தின் முக்கிய நோக்கம் சோடா உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ஐதரோகுளோரிக் காடி வாயுவை (Gaseous Hydrochloric Acid) முற்றிலுமாக வான் வெளியில் பரவாமல் குறைக்கும் படி சோடா உற்பத்தியாளர்களிடம் கொண்டு வரப் பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகும்.
1872 ஆம் ஆண்டு லிச்பீல்டு வேதித் தொழிற்சாலையின் (Lichfield Chemical Company) நிர்வாகி ஆனார். இந்த பணி அவருக்கு புதிய கண்டுபிடிப்புகள் செய்ய வழி வகுத்தது. அவரது முக்கிய புதுமைகளில் ஒன்று அக்காலத்தில் இங்கிலாந்தில் இருந்த உயரமான புகை போக்கி சுமார் 200 அடிக்கு மேல் (61 மீட்டர்) உருவாக்கியது.
டேவிஸ் வேதி தொழிற்சாலைகளில் எல்லாம் பொதுவாக காணப்படுகின்ற குணாதிசயங்களை அகலமாய் அலசி ஆராய்ந்து ‘வேதிப் பொறியியலின் விவரம் அடங்கிய சிறு நூல் (A Handbook of Chemical Engineering) என்ற செல்வாக்குள்ள புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அதோடு மட்டுமில்லாமல் 12 புகழ் வாய்ந்த சொற்பொழிவு வரிசைகளை வெளியிட்டார். அந்த சொற்பொழிவுகள் 1888 ஆம் ஆண்டு டேவிசால் மேன்செஸ்டர் தொழில் நுணுக்க பள்ளியில் (தற்சமயம் மேன்செஸ்டர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்) ஆற்றப்பட்டன. டேவிசின் இந்தச் சொற்பொழிவுகள் தான் வேதிப் பொறியியலின் சிறப்பம்சங்களை விவரித்து தனி ஒரு துறையாக உருவாக காரணமாக இருந்தது.
டேவிசின் சொற்பொழிவு தீப்பொறியாக அமெரிக்காவின் வேதித் தொழிற்சாலைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அமெரிக்காவிலுள்ள பல பல்கலைகழகங்களில் வேதிப் பொறியியல் பட்ட படிப்புகள் ஆரம்பமானது.
டேவிஸ் வேதி தொழிற்சாலைகளின் சங்கத்தை (Society of Chemical Industry) 1881 உண்டாக்கியதில் காரணகர்த்தாவாக திகழ்ந்தார். டேவிஸ் வேதிப் பொறியியல் துறையில் ஆற்றிய சிறப்புகளை பாராட்டி மேன்செஸ்டர் பல்கலைகழகத்தில் ஜாக்ஸன் மில் கட்டிடத்தின் நுழைவு வாயிலில் அவரது உருவப்படமும், நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டுள்ளது. வேதிப் பொறியாளர்களின் ஸ்தாபனம் (Institution of Chemical Engineers) அவரை கௌரவப்படுத்தும் விதமாக ஜார்ஜ் எட்வர்டு டேவிஸ் என்ற வெகுமான பதக்கத்தை அவரது பெயரால் வழங்கி வருகிறது.