ஜீவநாயகம் சிரில் டேனியல் (ஜூலை 9, 1927 - ஆகஸ்ட் 23, 2011) ஒரு இந்திய இயற்கையியலாளர். ஜே.சி. என்றும் அறியப்படுகிறார். இந்திய பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள இவர், அவற்றைப் பற்றி நூல்களை எழுதியுள்ளார்.[1][2]
இளம் வயதிலேயே இயற்கை மீது நேசம் கொண்டார். இரவில் நரிகள் ஊளையிடுவதும், அவற்றுடன் ஆந்தைகளின் அலறலும் அவரது குழந்தைப் பருவ நினைவுகளாக இருந்துள்ளன. விலங்குகளின் மீதான அவரது தாயின் பாசமும், அவரது தந்தையின் கல்வித்துறை பாண்டித்யமும் அவரை திருவனந்தபுரம் பொது நூலகத்துக்குச் செல்லத் தூண்டியுள்ளன. அங்கிருந்த ஆப்பிரிக்க காட்டுயிர்கள் தொடர்பான நூல்களைப் படித்தார்.
இளைஞராக இருந்தபோது, உலகப் புகழ்பெற்ற பறவை நிபுணர் டாக்டர் சாலிம் அலியால் உத்வேகம் பெற்ற அவர், சாலிம் அலி இணைந்திருந்த பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தில் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தார். 1950லேயே அந்தக் கழகத்தின் காப்பாளராக பொறுப்பேற்ற அவர், அந்த நிறுவனத்தின் முதல் இயக்குநராகவும் பின்னர் மாறினார். 1991இல் ஓய்வு பெற்ற பிறகு, அந்தக் கழகத்தின் கௌரவ உறுப்பினர், கௌரவ செயலராக இருந்து வந்தார்.
தி புக் ஆஃப் இந்தியன் ரெப்டைல்ஸ் (இந்திய ஊர்வன), எ செஞ்சுரி ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி அண்ட் கன்சர்வேஷன் இன் டெவலப்பிங் கன்ட்ரீஸ் (வளரும் நாடுகளில் ஒரு நூற்றாண்டு இயற்கை வரலாறும், பாதுகாப்பும்) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்தியன் ஒயில்ட்லைஃப் – இன்சைட் கைட்ஸ் என்ற நூலில் சிங்கங்கள் பற்றிய பிரிவை எழுதியுள்ளார். சாலிம் அலியின் நூற்றாண்டு 1996இல் கொண்டாடப்பட்டதை ஒட்டி, அவர் எழுதிய தி புக் ஆஃப் இந்தியன் பேர்ட்ஸ் (இந்திய பறவைகள்) புத்தகத்தை திருத்தி எழுதி 12வது பதிப்பை டேனியல் கொண்டு வந்தார்.
பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் ஆய்விதழின் நிர்வாக ஆசிரியராக இருந்ததுடன், ஹார்ன்பில் என்ற இதழையும் அவர் தொடங்கினார். அந்த இதழ் 2001ஆம் ஆண்டு வெள்ளிவிழாவைக் கொண்டாடியது.