மங்கம்மா சபதம் | |
---|---|
இயக்கம் | ஆசார்யா |
தயாரிப்பு | எஸ். எஸ். வாசன் ஜெமினி ஸ்டூடியோஸ் |
கதை | ஆசார்யா |
இசை | எம். டி. பார்த்தசாரதி எஸ். ராஜேஷ்வரராவ் |
நடிப்பு | ரஞ்சன் என். எஸ். கிருஷ்ணன் பி. ஏ. சுப்பையா பிள்ளை கொளத்து மணி வசுந்தரா தேவி டி. ஏ. மதுரம் |
ஒளிப்பதிவு | ராம்நாத் |
படத்தொகுப்பு | சந்துரு |
வெளியீடு | 1943 |
நீளம் | 17924 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மங்கம்மா சபதம் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] ஆசார்யாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், வசுந்தரா தேவி, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்தனர்.[3] ரஞ்சன் தந்தை, மகன் என இரு வேடங்களில் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்.[4] பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோரின் பாடல்களுக்கு எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஷ்வரராவ் ஆகியோர் இசையமைத்தனர்.[4]
மங்கம்மா சபதம் திரைப்படம் அக்காலத்தில் 4 மில்லியன் ரூபாய்களை நிகர லாபமாகப் பெற்று பெரும் வெற்றி பெற்றது.[5]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கலிங்க நாட்டில் வெங்கடாசலம் (பி. ஏ. சுப்பையா பிள்ளை) என்பவருக்கு பிறந்தவள் மங்கம்மா (வசுந்தரா தேவி). நல்ல அழகி. ஒரு நாள் மாடப்புறா ஒன்றைத் துரத்திக் கொண்டு அரண்மனைத் தோட்டத்திற்குள் நுழைகிறாள் மங்கம்மா. அங்கு இளவரசன் சுகுணன் (ரஞ்சன்) அவளை அணுகிப் பலாத்காரம் செய்ய முயலுகிறான். மங்கம்மா அவனிடம் இருந்து தப்பித்து வெளியேறுகிறாள். மங்கம்மாவின் மீது மோகம் கொண்ட சுகுணன் அடப்பங்காரனின் (பி. அப்பணய்யங்கார்) உதவியுடன், மங்கம்மாவின் இருப்பிடத்தை அறிந்து, அங்கு சென்று அவளிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்கிறான். புத்திசாலியான மங்கம்மா அவனைக் கீழே தள்ளி விடுகிறாள். கடைசியில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சபதம் போட்டுக் கொள்கிறார்கள்.[4]
மங்கம்மாவைக் கல்யாணம் செய்து, அவளைச் சிறையில் அடைத்து, அவளின் கருவத்தை ஒடுக்குவதாக சுகுணன் சபதம் செய்கிறான். அப்படியே அவனைக் கல்யாணம் செய்து கொண்டு, வாழாவெட்டியானால், அவனை அறியாமல், அவனுக்கே ஒரு பிள்ளையைப் பெற்று அப்பிள்ளையைக் கொண்டே இளவரசனுக்கு சவுக்கடி கொடுப்பதாகப் பதிலுக்கு மங்கம்மா சபதம் செய்கிறாள்.[4]
அரசன் (பி. என். சேசகிரி பாகவதர்) வெங்கடாசலம் வீட்டுக்கு மந்திரியை (பி. வி. ராவ்) அனுப்பி மங்கம்மாவை சுகுணனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் படி கேட்கிறான். திருமணமும் நடக்கிறது. திருமணம் முடிந்தவுடன் மங்கம்மா சிறையில் அடைக்கப்படுகிறாள். சிறையில் தன்னைப் பார்க்க வந்த தந்தையிடம் சிறைக்கும், தந்தையின் வீட்டுக்கும் ஒரு சுரங்கம் அமைக்கும் படி கேட்கிறாள். அதன் படி, சுரங்கம் ஒன்று கட்டப்படுகிறது. தந்தையின் உதவியால், கழைக்கூத்தாடி ஒருவனிடம் (கொளத்து மணி) ஆடல், பாடல்களைக் கற்றுக் கொள்கிறாள். மங்கம்மா கழைக்கூத்தாடிச்சி வேடம் கொண்டு சுகுணன் முன் நடனமாடுகிறாள். சுகுணன், அவளிடம் மனதைப் பறி கொடுத்து, அன்றைய இரவை அவளுடன் கழிக்கிறாள்.[4]
மங்கம்மாவுக்கு ஒரு பிள்ளை பிறக்கிறான். அவனுக்கு வயது வரும் வரை அவள் காத்திருக்கிறாள். மகனும் (ரஞ்சன்) தந்தையைப் பழி வாங்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். அவன் சுகுணனை வஞ்சித்து, அவனை ஒரு சாக்கில் போட்டுக் கட்டி, சபையறியத் தாயின் சபதத்தை நிறைவேற்றுகிறான்.[4]
நடிகர் | பாத்திரம் |
---|---|
வசுந்தரா தேவி | மங்கம்மா |
ரஞ்சன் | சுகுணன், ஜெயபாலன் |
பி. ஏ. சுப்பையா பிள்ளை | வெங்கடாசலம் |
பி. என். சேசகிரி பாகவதர் | அரசன் |
பி. வி. ராவ் | மந்திரி |
பி. அப்பண்ணய்யங்கார் | அடப்பக்காரன் |
புலியூர் துரைசாமி | தலையாரி |
எம். ராமமூர்த்தி | சுமதி |
ஏ. எஸ். லீலாவதி | ரதி |
கொளத்து மணி | கழைக்கூத்தாடி |
ராமசாமி | சாரங்கி |
என். எஸ். கிருஷ்ணன் | சாத்தான் |
டி. ஏ. மதுரம் | யமுனா |
மங்கம்மா சபதம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள்:[4]