யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
යාපනය විශ්වවිද්‍යාලය
முந்தைய பெயர்கள்
இலங்கை பல்கலைக்கழகம் (யாழ்ப்பாணக் கிளை) University of Sri Lanka (Jaffna Campus)
குறிக்கோளுரைமெய்ப்பொருள் காண்பதறிவு
வகைபொதுத்துறை
உருவாக்கம்ஆகத்து 1, 1974 (1974-08-01)
நிதிநிலைரூ. 827 மில்லியன்
வேந்தர்கலாநிதி சிவசுப்ரமணியம் பத்மநாதன்
துணை வேந்தர்பேரா. சி.சிறீசற்குணராஜா
பதிவாளர்விஸ்வநாதன் காண்டீபன்
கல்வி பணியாளர்
388
நிருவாகப் பணியாளர்
804
மாணவர்கள்5,721
பட்ட மாணவர்கள்5,257
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்443
21
அமைவிடம், ,
9°41′04.90″N 80°01′18.90″E / 9.6846944°N 80.0219167°E / 9.6846944; 80.0219167
வளாகம்பல
சேர்ப்புபொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்jfn.ac.lk

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (University of Jaffna) இலங்கையிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுள் ஒன்று. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்த போதிலும், 1974 ஆம் ஆண்டிலேயே இது நிறுவப்பட்டது. சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து இப்பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியது.

வரலாற்றுப் பின்னணி

[தொகு]

இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகளில் பல்கலைக்கழகமொன்று இல்லாமை ஒரு பெருங் குறையாக இருந்துவந்தது. எனினும் இத்தகைய ஒரு பல்கலைக்கழகம் எங்கே நிறுவப்பட வேண்டுமென்பதில் தமிழர் பிரதிநிதிகளிடையே ஒத்தகருத்து நிலவவில்லை. இலங்கைத் தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, திருகோணமலையிலேயே பல்கலைக் கழகம் நிறுவப்பட வேண்டுமென்று வாதிட்டுவந்தது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரும் வேறு சிலரும் யாழ்ப்பாணத்தில் இது அமையவேண்டுமென்றனர். இலங்கையின் தமிழர் பிரதேசத்தின் மத்திய பகுதியில் திருகோணமலை அமைந்திருப்பதும், தமிழர் பகுதியின் தலைமையிடமாகத் திருகோணமலையை வளர்த்தெடுக்கும் நோக்கம் இருந்ததும் தமிழரசுக் கட்சியினர் திருகோணமலையை அமைவிடமாக வலியுறுத்தி வந்ததற்கான காரணங்களிற் சில. திருகோணமலையில் குடித்தொகை அடிப்படையில் தமிழர் விகிதாசாரம் குறைந்துவருவதைத் தடுத்து நிறுத்தவும் இது உதவுமென அவர்கள் கருதினார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பெயர்ப்பலகை

அக்காலத்தில் யாழ்ப்பாண மாணவர்களே மிகப் பெரும்பான்மையாகப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகினர். எனவே உடனடியாக யாழ்ப்பாணத்திலேயே பல்கலைக்கழகம் தேவை என எதிரணியினர் வாதாடியதுடன், திருகோணமலையின் குடித்தொகை நோக்கங்களைப் பொறுத்தவரை தமிழருக்குப் பாதகமான விளைவுகளே ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்தார்கள்.

1965 ல் பதவிக்குவந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசில், தமிழரசு, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பங்காளிகளாக இருந்தும், தமிழர் பகுதியொன்றில் பல்கலைக்கழகமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு சாதகமான நிலைமை இருந்தபோதிலும் கூட, தமிழரிடையே ஒத்தகருத்தின்மை காரணமாக எதுவும் நடைபெறவில்லை. 1972ல் இலங்கை சுதந்திரக் கட்சி வெற்றிபெற்று சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமரான பின்னர். தமிழரசுக் கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றை நிறுவினார்.

யாழ்ப்பாண வளாகம் ஆரம்பம்

[தொகு]

வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி வளவிலமைந்துள்ள பட்டதாரி மாணவப் பிரிவையும் 1921 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் சேர். பொன்னம்பலம் இராமநாதனால் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டிருந்த பரமேசுவராக் கல்லூரியையும் இணைப்பதன் மூலம் 1974 ஆகத்து 1 ஆம் நாள் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் நிறுவப்பட்டது. 1974 சூலை 19 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான எல். எச். சுமணதாச வித்தியாலங்காரப் பல்கலைக்கழகத்தின் இந்துக் கற்கை, தமிழ் ஆகிய துறைகளின் தலைவரான கலாநிதி க. கைலாசபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டதை அறிவித்தார்.

இவ்வாறு 1974 சூலை 25 வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 121/5 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியாகிய பிரகடனத்தின் மூலம் 1974 ஆகத்து முதலாம் நாள் நிறுவப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் சட்டபீடம், உடற்கல்விப்பீடம் என்பவற்றை நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் ஆரம்பத்தில் விஞ்ஞான பீடம், மனிதப் பண்பியற் பீடம் என்பவற்றுடன் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாண வளாகத்தின் முதல் போதனைசார் ஊழியர்களாக 1974 செப்டெம்பர் 1 ஆம் திகதியன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பணியாற்றிய சில ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்நிலைமைகளைத் தொடர்ந்து இலங்கையின் அப்போதைய பிரதம மந்திரியான சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் 1974 அக்டோபர் 6 ஆம் நாள் பிற்பகல் 2.25 மணியளவில் யாழ்ப்பாண வளாகம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் யாழ்ப்பாண வளாகத்தின் முதல் 14 மாணவர்களுக்கான மாணவர் பதிவுப் புத்தகம் பிரதமரால் வழங்கப்பட்டது[1].

பல்கலைக்கழகமாதல்

[தொகு]

அக்காலத்தில் இலங்கையிலிருந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இலங்கைப் பல்கலைக் கழகம் என்ற ஒரே பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு வளாகங்களாகவே செயற்பட்டு வந்தன. எனவே யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமும், "இலங்கைப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாண வளாகம்" என்றே அழைக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதன் விளைவாக உயர்கல்வி நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் 1979 சனவரி 1 ஆம் நாள் தன்னாதிக்கமுள்ள பல்கலைக்கழகமாகியது. தமிழறிஞர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்[1].

வவுனியா வளாகம்

[தொகு]

இதன் ஓர் வளாகம் வவுனியாவின் நகரப்பகுதியில் உள்ளது. குருமண்காட்டில் விஞ்ஞானபீடமும், ஆங்கில கற்கைநெறிகளுக்கான பீடமானது வவுனியா உள்வட்ட வீதியிலும் அமைந்துள்ளது. வவுனியாப் பீடத்திற்கான ஒருதொகை நிலப்பரப்பானது வவுனியா மன்னார் வீதியில் A30 (தேசப்படத்தில் வவுனியா பறையனாலங்குளம் வீதி என்றே காணப்படுகின்றபோதும் இப்பெயரானது பாவனையில் இல்லை) பம்பைமடுப் பகுதியில் சுமார் வவுனியா நகரத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் ஒதுக்கப்பட்டு தற்போது வியாபாரக் கற்கைகள் பீடம் மட்டுமே பம்பைமடுவில் இயங்கி வருகின்றது.

பிரிவுகளும் கற்கைத் துறைகளும்

[தொகு]
  • விவசாய பீடம்
  • கலைப்பீடம்
  • முகாமைத்துவம் மற்றும் வர்த்தக பீடம்
  • மருத்துவ பீடம்
  • விஞ்ஞான பீடம்
  • பொறியியற் பீடம்
  • தொழில்நுட்பப் பீடம்
  • உயர்பட்டப் படிப்புக்கள் பீடம்
  • இராமநாதன் நுண்கலைக் கல்லூரி
  • சித்த மருத்துவப் பிரிவு
  • ஊடக கற்கை வள நிலையம்

யாழ் பல்கலைக்கழக நூலகம்

[தொகு]

யாழ்ப்பாணக் கல்லூரி ஏற்கனவே கொண்டிருந்த வெளிநிலைப்பட்டப்படிப்புகள் அலகின் நூலக வளங்கள், குறிப்பிடக் கூடிய வகையில் பல்கலைக்கழகக் கல்வியின் ஆரம்ப முன்னெடுப்புக்களுக்கு ஏற்றதாக அமைந்திருந்தது. இதன் வளர்ச்சியில் யாழ்ப்பாணத்தில் நிலவி வந்த அசாதாரணமான சூழ்நிலைகளும் காலத்திற்குக் காலம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக 1987ஆம் ஆண்டில் இந்திய அமைதிப் படை காலத்திலும் பின் 1996 ஆம் ஆண்டின் இடப்பெயர்வின் போதும் நூலகம் இழப்புக்களை சந்தித்தது.

யாழ் பல்கலைக்கழக நூலகம் விஞ்ஞான பீடத்திற்கும் கலைப்பீடத்திற்கும் நடுவில் பார்வதி பரமேஸ்வரன் ஆலயத்திற்கு தென்மேற்கில் இராமநாதன் வீதியை நோக்கி அமைந்துள்ளது. இக்கட்டிடம் 1980 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு 2000 ஆம் ஆண்டு வரையில் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடம் மையப்பகுதியில் இரண்டு மாடிக் கட்டிடமாக உள்ளது. இம்மையப் பகுதியைச் சூழ சதுரவடிவிலமைந்த கட்டிடத் தொகுதியையும் கொண்டுள்ளது. இதன் பரப்பு 67,718 சதுர அடிகள்.[2]

ஆரம்ப காலத்தில், பரமேஸ்வராக் கல்லூாியில் தற்காலமாக ஒரு கட்டிடத்தில் மனிதப்பண்பியல் பீடத்திற்கான நூலகமும், வட்டுக்கோட்டையில் அறிவியல் பீட நூலகமும் ஆரம்பிக்கப்பட்டன. பிரதான நூலகத்தின் கட்டிடத்தொகுதியின் ஒருபகுதி நிறைவு பெற்றபின் 1982 ஆம் ஆண்டு மனிதப்பண்பியல் பீடத்திற்கான நூலகமும், விஞ்ஞானபீட நூலகமும் இணைக்கப்பட்டு பிரதான நூலகமாக இயங்கத் தொடங்கியது. மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கற்கை நெறிகளுக்கேற்ப கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. மருத்துவ பீடநூலகம், விவசாய பீடநூலகம், சித்த மருத்துவ நூலகம், இராமநாதன் நுண்கலை நூலகம் என்பன கிளை நூலகங்களாகும்.

பரமேசுவராக் கல்லூாியில் சோ் பொன். இராமநாதன் அவா்களின் நூலகத்தில் இருந்த அரிய நூல்களையும் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம் கொண்டிருந்த 30,000 வரையிலான நூல்களையும் மேலும் பருவ இதழ்கள், அரச ஆவணங்கள், சிறு பிரசுரங்கள் போன்றவற்றையும் கொண்டு யாழ் வளாகம் தன் நூலகச் செயற்கைகளைத் தொடங்கியது. பிற்காலத்தில் 1980 - 1983ஆம் ஆண்டுகளில் அரச கட்டளைப்படி யாழ்ப்பாணக் கல்லூரியின் நூல்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. இராமநாதன் நூலகத்தில் இருந்த நூல்கள் பற்றிய பதிவுகள் பேணப்படாமையால் அந்நூல்கள் அனைத்தும் நூலகத்திற்கு வந்து சோ்ந்தனவா என்பதில் தௌிவில்லை.

இந் நூலகத்தின் தகவல் வளங்கள் என்பது பெரும் அளவில் ஆவணம் சாா்ந்தவையேயாகும். அவற்றிலும் பெருமளவில் நூல்களே உள்ளன. இவற்றைவிட பருவ இதழ்கள், குறிப்பிடக் கூடிய அளவிலும், இலத்திரனியல் சாதனங்கள் எண்ணக்கூடிய அளவிலும் உள்ளன. இதுவரை சோ்வுடாப்பில் 1.8 இலட்சம் பதிவுகளுக்கு மேல் உள்ளன. 461 தலைப்புக்களில் பருவ இதழ்கள் இந்நூலகத்தில் காணப்படுகின்றன.

யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள்

[தொகு]

யாழ் வளாகத் தலைவர்கள்

[தொகு]

யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பரணிடப்பட்டது 2011-06-28 at the வந்தவழி இயந்திரம், பேராசிரியர் தி. வேல்நம்பி, தலைவர், கணக்கியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  2. Annual report-1990 University of jaffna

வெளியிணைப்புகள்

[தொகு]