பசவ பிரேமானந்த் Basava Premanand | |
---|---|
பிறப்பு | 17 பிப்ரவரி 1930 கோழிக்கோடு, கேரளம், இந்தியா |
இறப்பு | அக்டோபர் 4, 2009 போத்தனூர், தமிழ்நாடு | (அகவை 79)
பணி | பகுத்தறிவாளர், இறைமறுப்பாளர், இறைமாந்தர் எதிர்ப்பாளர் |
பசவ பிரேமானந்த் (Basava Premanand, பெப்ரவரி 17, 1930 - அக்டோபர் 4, 2009) உலகெங்கும் அறியப்பட்ட இந்திய கேரளத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளரும் இறைமறுப்பாளரும் ஆவார்.
பிரேமானந்த் கேரளத்தின்கோழிக்கோட்டில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் இறையியல் சமூகத்தின் உறுப்பினர்கள்.
1940களில், பிரேமானந்த் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெற பள்ளிப்படிப்பை விட்டார். அடுத்த ஏழு ஆண்டுகள் சாந்திநிகேதன் போன்ற கல்வியமைப்பையொத்த சிறீ ச்டீலா குருகுலத்தில் படித்தார்[1].
1975 வாக்கில் இந்திய இறைமாந்தர் சத்திய சாயி பாபாவுடன் மோதி அவரது இறைத்தன்மையை பொய்மை என நிறுவுவதில் முழுநேரம் ஈடுபட்டார்[2]. அவர் தமது மந்திரவாத ஆற்றல்களை பயன்படுத்தி அத்தகைய இறைமாந்தரால் செய்துகாட்டுவதாகக் கூறப்படும் விந்தைகளை அறிவியல் வழியே செய்ய முடிவதைக் காட்டி விளக்கினார். "குரு உடைப்பாளர்கள் (Guru Busters)"[3], என்ற பிரித்தானிய ஆவணப்படத்தில் பிரேமானந்த் மனித ஆற்றலுக்கு மீறியதாகக் கருதப்படும் உடலை அந்தரத்தில் மிதப்பது, உடலைத் துளைப்பது மற்றும் உயிருடன் புதைந்திருப்பது, விபூதி வரவழைப்பது, லிங்கம் வரவழைப்பது, முதுகில் அலகு குத்தி காரை இழுப்பது, தகதகக்கும் தீ குழிக்குள் நிதானமாக நடந்து செல்வது போன்ற விந்தை செயல்களை செய்து காட்டியுள்ளார்.
1982ஆம் ஆண்டில் மகாராட்டிர லோக் வித்யான் நடத்திய விஞ்ஞான் யாத்ரா (அறிவியலுக்கான நடை)யிலும் 1987ஆம் ஆண்டில் பாரத் ஜன் விஞ்ஞான் ஜாதாவிலும் பங்கு கொண்டு பகுத்தறிவு பரவலுக்கு வழிவகுத்தார்[1].
எண்பதுகளிலிருந்து இருந்தது, இறந்தது எல்லாமே கோயம்புத்தூரில். "கடவுளின் பெயரால் அற்புதங்கள் நிகழ்த்துபவர்கள் அதனை அறிவியல்பூர்வமாக நிரூபித்துக் காட்டினால் அதற்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு" என பிரேமானந்த் விடுத்த அறைகூவல் அவரைப் போலவே வெல்லப்பட முடியாமல் இன்னமும் சவால் விட்டபடி காத்துக்கொண்டு இருக்கிறது.