![]() |
---|
இந்தக் கட்டுரை இலங்கை அரசு மற்றும் அரசியல் தொடர்பான கட்டுரைத் தொடரின் பகுதியாகும். |
இலங்கையின் ஆளுநர் அல்லது இலங்கையின் மகாதேசாதிபதி (Governor General of Dominion of Ceylon) என்பது 1948-1972ல் இலங்கையின் நாட்டுத் தலைவரின் பட்டமாகும். இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்த போதிலும்கூட, 1947ம் ஆண்டு பிரித்தானியர்களால் முன்வைக்கப்பட்ட சோல்பரி அரசியலமைப்பே 1972ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. இந்த அரசியல் யாப்பில் இலங்கையில் பெயரளவு நிர்வாகியாக பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதி என்ற வகையில் மகாதேசாதிபதி பதவி காணப்பட்டது. சோல்பரி அரசியலமைப்பிற்கு முன்பு காணப்பட்ட தேசாதிபதிகளை விட இப்பதவி அதிகாரத்தில் குறைந்ததாக இருந்தது.[1][2]
மகாதேசாதிபதிப் பதவி பிரித்தானிய முடியின் பிரதிநிதியாக அமைந்தமையினால் இவர் இலங்கையராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை விடுதலை அடையும் போது இலங்கையின் தேசாதிபதியாக இருந்தவர் சேர். ஹென்றி மொங்-மேசன் மூர் என்பவர். இவர் விடுதலைக்கு முன்பே தேசாதிபதியாக பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்டவர். இவரின் பதவிக்காலம் 1949 ஜுலை 6 இல் நிறைவடைந்தது. அதுவரை இலங்கையின் தேசாதிபதியாகவே அவர் பணியாற்றினார். இவரின் பதவிக்காலம் முடிந்த பின்பு இலங்கைப் பிரதமர் டி. எஸ். சேனநாயக்காவின் சிபாரிசின் பேரில் பிரித்தானிய முடி 1949 ஜுலை 6 இல் சோல்பரி அரசியல் யாப்பினை உருவாக்குவதில் மூலகர்த்தாவாக இருந்த சோல்பரி பிரபு என்ற ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம் என்பவரை மகாதேசாதிபதியாக நியமித்தது. இவரின் பதவிக்காலம் 1954, ஜுலை 17 இல் நிறைவடைந்தது. இறுதி மகாதேசாதிபதியாக 1962 முதல் 1972 வரை வில்லியம் கொபல்லாவ இருந்தார்.
இலங்கைப் பிரதம மந்திரியின் சிபாரின்படி பிரித்தானிய முடியினால் இவர் நியமிக்கப்படுவார்.
பதவிக்காலம் குறித்து யாப்பில் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கொரு முறை மகதேசாதிபதி மாற்றப்படுவது மரபாகப் பேணப்பட்டது.
படம் | பெயர் | பிறப்பு | இறப்பு | ஆளுநரான நாள் | இறுதி நாள் | இறையாண்மை |
---|---|---|---|---|---|---|
சேர் ஹென்றி மொங்க்-மேசன் மூர் | 1887 | 1964 | 4 பெப்ரவரி 1948 | 6 சூலை 1949 | ஜோர்ஜ் VI | |
ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு | 6 மே 1887 | 30 சனவரி 1971 | 6 சூலை 1949 | 17 சூலை 1954 | ஜோர்ஜ் VI எலிசபெத் II | |
சேர் ஒலிவர் குணத்திலக்க | 20 அக்டோபர் 1892 | 17 திசம்பர் 1978 | 17 சூலை 1954 | 2 மார்ச் 1962 | எலிசபெத் II | |
வில்லியம் கோபல்லாவ | 17 செப்டம்பர் 1897 | 31 சனவரி 1981 | 2 மார்ச் 1962 | 22 மே 1972 | எலிசபெத் II |