ராஜ் ராஜரத்தினம் | |
---|---|
பிறப்பு | 1957 கொழும்பு, இலங்கை |
பணி | நிதி, பங்கு முதலீடு, தொழிலதிபர் |
வாழ்க்கைத் துணை | ஆஷா பாப்லா |
பிள்ளைகள் | மூன்று |
ராஜ் ராஜரத்தினம் (Raj Rajaratnam) இலங்கையில் பிறந்த அமெரிக்கர். நியூயார்க்கில் கெலோன் குழுமம் என்ற பங்கு வணிக நிறுவனத்தை நிறுவியவர்[1][2]. இவர் உட்தகவல் வணிகம் எனப்படும் பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு எஃப்பிஐ எனப்படும் அமெரிக்க நடுவண் புலனாய்வு நிறுவனத்தினால் 2009, அக்டோபர் 16 இல் கைது செய்யப்பட்டார்[3]. இவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவரது கைதை அடுத்து கெலொன் குழுமம் சனவரி 2010 இல் மூடப்பட்டது. ராஜரத்தினம் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளதோடு இது குறித்து நீதிமன்றத்தில் வாதாடவுள்ளதாகவும் இவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இவர் மீதான வழக்கு ஐக்கிய அமெரிக்கா எ. ராஜரத்தினம் (09 Cr. 01184 RJH) விசாரிக்கப்பட்டு, 2011, மே 11 இல் 14 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன[4][5]. 2011 அக்டோபர் 13 இல் ராஜரத்தினத்துக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது[6].
கொழும்பில் பிறந்த ராஜரத்தினம் தனது ஆரம்பக் கல்வியை கொள்ளுப்பிட்டி புனித தோமையர் கல்லூரியில் கற்றார்[7][8]. பின்னர் இங்கிலாந்து சென்று பள்ளிப் படிப்பை முடித்து சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்துப் பொறியியல் பட்டம் பெற்றார். 1983 இல் பென்சில்வேனியா வார்ட்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.
ஃபோர்ப்ஸ் இதழின் படி, பங்கு வணிகத்தில் ஈடுபட்டு கோடீசுவரரான ராஜரத்தினம், 2009 ஆம் ஆண்டில் 1.8 பில்லியன் டாலர்கள் பெறுமதியுடன் அமெரிக்காவின் 236வது பணக்காரராக இருந்தவர்[2]. 2008 ஆம் ஆண்டில் 162வது அமெரிக்கப் பணக்காரராக இருந்தார்[9], அத்துடன் 2009 ஆண்டில் இலங்கையில் பிறந்த பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தில் இருந்தார்.
ராஜரத்தினம் தனது வங்கிப் பணியை முதன் முதலில் சேஸ் மான்ஹட்டன் வங்கியில் கடன் வழங்கும் அதிகாரியாகத் தொடங்கினார். பின்னர் 1985 இல் நியூயோர்க்கின் நீடம் வங்கியில் சேர்ந்து இலத்திரனியல் துறையில் உள்ள தொழிலதிபர்களையே இலக்காக கொண்டிருந்தார். 1987 இல் அந்நிறுவனத்தின் ஆய்வுப் பகுதியின் தலவராகவும், பின்னர் மார்ச் 1991 இல் தனது 34வது அகவையில் அந்நிறுவனத்தின் தலவராகவும் ஆனார்[10]. அங்கு பணியாற்றும் போது 1992 ஆம் ஆண்டில் தொழில் நுட்ப பங்குகளில் முதலீடுகளை செய்வதற்கு முதலீட்டு வணிகத்துக்கான நிதியம் (hedge fund) ஒன்றை ஆரம்பித்தார். இந்நிதியத்தைப் பின்னர் அவர் சொந்தமாக்கி கெலோன் குழுமம் எனப் பெயரை மாற்றினார்.
ராஜ் ராஜரத்தினத்தின் இளைய சகோதரரும் ஹெட்ஜ் நிதி நிறுவனம் செட்னா கேப்பிடலின் நிறுவனருமான ராஜரெங்கன் (ரெங்கன்) ராஜரத்தினம்[11][12] பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்கப் புலனாய்வுத் துறையினரால் 2013 மார்ச்சில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு நியூயோர்க்கில் 2014 சூன் மாதத்தில் ஆரம்பமானது.[13]. இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் 2014 சூலை 8 இல் அவர் குற்றவாளியல்ல எனத் தீர்ப்பளித்து அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்தது.[14]