வேலூர் ஜி. ராமபத்ரன் | |
---|---|
சர்வழகு ராமபத்ரன் | |
பிறப்பு | வேலூர், தமிழ்நாடு | 4 ஆகத்து 1929
இறப்பு | பெப்ரவரி 27, 2012 | (அகவை 82)
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | மிருதங்க வாத்திய கலைஞர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | கொன்னக்கோல் கோபாலாச்சாரியார் |
வேலூர் ஜி. ராமபத்ரன் (Vellore G. Ramabhadran) (பி: ஆகத்து 4, 1929 - இ: பெப்ரவரி 27, 2012) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசை மிருதங்க வாத்தியக் கலைஞர்.
வேலூரைச் சேர்ந்த இவரது தகப்பனார் கொன்னக்கோல் கோபாலாச்சாரியார், 1930களின் தொடக்க காலப்பகுதியில் அங்கே சங்கீத சபா நடத்தி வந்தார். இந்த சபாவில் சிறு வயதுப் பிள்ளைகளுக்கு இசைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் அளித்து வந்தார். அக்காலத்தில் பிரபல இசை வித்துவான்களாகிய காஞ்சீபுரம் நயினார் பிள்ளை, பாலக்காடு மணி ஐயர் மற்றும் புதுக்கோட்டை தட்சணாமூர்த்திப் பிள்ளை ஆகியோர் பங்குபற்றி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். இந்த சபாவிலே 1936ல் எம். எஸ். சுப்புலட்சுமி பாடியதாகவும் அவரது சகோதரர் சக்திவேல் மிருதங்கம் வாசித்ததாகவும் தாயார் சண்முகவடிவு வீணை இசைத்ததாகவும் ராமபத்ரன் ஒரு செவ்வியில் நினைவு கூர்ந்துள்ளார்.[1]
சபாவில் நடந்த இசை நிகழ்ச்சிகள் ராமபத்ரனின் மனதை ஈர்த்தன. தனது எட்டாவது வயதிலிருந்து தந்தையிடம் மிருதங்கம் பயிலத் தொடங்கினார்.
இரண்டாம் உலகப் போர் காரணமாக சென்னையிலிருந்த பலர் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அவ்வாறு 1942 ல் திருப்பாற்கடல் ஸ்ரீநிவாச ஐயங்கார் தனது குடும்பத்துடன் சேலத்துக்கு சென்றார். அச்சமயம் ராமபத்ரன் அவரிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார்.
1950ல் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார்.
முதன்முதலாக 1943 ல் சென்னை செகநாத சங்கீத சபாவில் மதுரை மணி ஐயரின் இசைக் கச்சேரிக்கு மிருதங்கம் வாசித்தார். அக்காலத்தில் சபாக்கள் குறைவாகவே இருந்தன. இவர் மதுரை மணி ஐயருடன் சேர்ந்து பல கோவில்களில் வாசித்தார். கலையை பணத்துக்காக இல்லாமல் இறைவன் முன்னிலையில் வாசித்தது பற்றின் காரணமாகவே என ராமபத்ரன் குறிப்பிட்டுள்ளார்.
இவர் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், ஜி. என். பாலசுப்பிரமணியம், மகாராஜபுரம் சந்தானம், டி. வி. சங்கரநாராயணன், டி. என். சேஷகோபாலன், பி. ராஜம் ஐயர், பி. எஸ். நாராயணசுவாமி மற்றும் புல்லாங்குழல் மாலி, என். ரமணி, வயலின் வித்துவான்கள் லால்குடி ஜெயராமன், டி. என். கிருஷ்ணன் போன்ற மூத்த இசைக் கலைஞர்களின் இசைக் கச்சேரிகளுக்கு மிருதங்கம் வாசித்துள்ளார்.[2]
கர்நாடக இசைக் கலைஞர்களுடன் மட்டுமன்றி வட இந்திய இசைக் கலைஞர்களான ஜாகீர் ஹுசெய்ன் (Zakir Hussain), அல்லா றக்கா (Alla Rakha), அம்ஜத் அலி கான் (Amjad Ali Khan), ஹரிபிரசாத் செளராசியா (Hariprasad Chaurasia) ஆகியோருக்கும் மிருதங்கம் வாசித்துள்ளார்.[1]
1962ல் முதன்முதலாக வீணை பாலச்சந்தர், புல்லாங்குழல் என். ரமணி ஆகியோருடன் அமெரிக்கா சென்று அங்கு பல்வேறு நகரங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் நடைபெற்ற கச்சேரிகளில் மிருதங்கம் வாசித்தார். அதன் பின்னர் பல வெளிநாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகளில் பங்குபற்றியுள்ளார்.
1948 ல் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்காக இசை அரசு எம். எம். தண்டபாணி தேசிகரின் கச்சேரிக்கு மிருதங்கம் வாசித்தது என்றும் நினைவில் நிற்கும் என்கிறார் ராமபத்ரன்.
1975ல் முன்னணி மிருதங்க வித்துவானான பாலக்காடு மணி ஐயர் கைகளால் கிருஷ்ண கான சபா வழங்கிய சங்கீத சூடாமணி விருது பெற்றது.
சிலர் நடன நிகழ்ச்சிகளுக்கு மிருதங்கம் வாசிக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால் நடனத்துக்கு மிருதங்கம் வாசிப்பவர்கள் இசைக் கச்சேரிகளில் வாசிப்பது சிரமம். இக்காலத்தில் சிலர் ஆடை அலங்கார அணிவகுப்பு காட்சிகளுக்குக் கூட மிருதங்கம் வாசிக்கிறார்கள்.
மிருதங்கம் ஒரு பக்கவாத்தியம். வாய்ப்பாட்டுக்காக மிருதங்கமே தவிர மிருதங்கத்துக்காக வாய்ப்பாட்டு அல்ல. சில ஆவர்த்தனங்களை தனியாக வாசிக்கலாம்.
சர்வழகு என்பது இவ்வாறு பிரதான வித்துவானுக்கு இடையூறு செய்யாமல் மிருதங்கம் வாசிப்பது. ராமபத்ரனை சர்வழகு ராமபத்ரன் என்று குறிப்பிடுவார்கள். "சர்வழகு என்ற பெயரில் ராமபத்ரனின் தனி ஆவர்த்தனம் கொண்ட குறுந்தட்டு ஒன்று வெளிவந்துள்ளது.[3]
கே. பாலச்சந்தர் தயாரித்த சிந்து பைரவி படத்தில் வரும் கே. ஜே. யேசுதாஸ் பாடிய மரி மரி நின்னே என்ற பாடலுக்கு ராமபத்ரன் மிருதங்கம் வாசித்துள்ளார். படத்தில் சிவகுமார் பாட, டெல்லி கணேஷ் மிருதங்கம் வாசிப்பதாக காட்சி அமைந்துள்ளது.[4]
2012 பெப்புருவரி 27ஆம் நாள் தனது 82ஆவது அகவையில் சென்னையில் காலமானார்.