பேட்ரிசியா கேதலன் பேஜ் (Patricia Kathlee n "P. K." Page, நவம்பர் 23 , 1916 – சனவரி 14, 2010) என்பவர் ஒரு கனட கவிஞர், புதின எழுத்தாளர், கட்டுரையாளர், ஆசிரியர் மற்றும் ஓவியர் ஆவார். இவர் முப்பதிற்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுள்ளார். குழந்தைகளுக்கான நூல்கள், கட்டுரைகள், சுயசரிதைகள் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் கனடாவில் உள்ள தேசிய காட்சியகத்தில் உள்ளது.
பி. கே. பேஜ் இங்கிலாந்திலுள்ள சுவான்சில் பிறந்தார். 1919 இல் தன்னுடைய குடும்பத்துடன் கனடா சென்றார். பேஜின் பெற்றோர்கள் அல்பெர்டாவில் உள்ள ரெட் டீருக்கு 1919 இல் இடம்பெயர்ந்தனர். அப்பொது பேஜிற்கு மூன்று வயதாகும்.பிறகு அவர்கள் கால்கரி மற்றும் வினிப்பெக் போன்ற நகரங்களுக்கும் சென்றனர்.[1] தன்னுடைய பெற்றோரைப் பற்றிக் கூறுகையில் அவர்கள் படைப்பாக்கத்திறன் கொண்டவர்களாகவும், ஊக்கப்படுத்துபவர்களாகவும், இணக்கவாதிகளாகவும், கலையை நேசிப்பவர்களாகவும் இருந்தனர். மேலும் அவர்கள் தனக்கு கவிதைகளை வாசித்துக் காட்டி உச்சரிக்கக் கற்றுத் தந்ததாகவும் கூறியுள்ளார். இவர் சிறுவயதாக இருக்கும் போதே கவிதையின் மொழி இயைபுவினால் இவரை அறியாது அதன் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது.[2]
பிறகு பேஜ், புனித ஜான், நியூப்ரூன்ஸ்விக் நகரம் சென்றார். அங்கு ஒரு கடையில் உதவியாளராகப் பணிபுரிந்தார். பின் 1930 இறுதியில் வானொலி நடிகையானார்.[3]
பின் 1941 ஆம் ஆண்டில் பேஜ் மொண்ட்ரியால் சென்றார். அங்குள்ள மொண்ட்ரியல் கவிஞர்கள் குழுவின் நட்பு அவருக்குக் கிடைத்தது. அந்தக் குழுவில் ஏ.எம். கிளெய்ன் மற்றும் எஃப். ஆர். ஸ்காட் ஆகியோர் இருந்தனர். 1944 இல் ஜூடித் கேப் எனும் புனைபெயரில் இவர் எழுதிய தெ சன் அண்டு மூன் (சூரியனும் நிலாவும்) என்ற காதற்செய்கை புதினம் வெளியானது. இந்த புதினத்தின் மறுபதிப்பானது, இவர் 1940 ஆம் ஆண்டில் எழுதிய சில சிறுகதைகளோடு 1973 இல் வெளியானது.[4]
பிறகு இவர் கனட தேசியத் திரைப்பட வாரியத்தில் திரைக்கதை எழுத்தாளராக ஆனார். அங்குதான் மெக்லிகன் இதழின் முன்னாள் பதிப்பாளரான ஆர்தர் இர்வினைச் சந்தித்தார். பிறகு 1950 ஆம் ஆண்டில் அவரைத் திருமணம் செய்தார்.[2] திருமணத்திற்குப் பிறகு உலோகமும் பூக்களும் எனும் கவிதைத் தொகுப்பினை எழுதினார். 1954 இல் வெளிவந்த இந்தக் கவிதைத் தொகுப்பிற்காக இவருக்கு தலைமை ஆளுநர் விருது கிடைத்தது.[3]
பேஜினுடைய எழுத்துலக வாழ்க்கையினை இரண்டு காலங்களாகப் பிரிக்கலாம். ஒன்று 1940 முதல்1950 ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலம். இரன்டாவது அவர் கனடாவில் இருந்து திரும்பிய 1960 ஆம் ஆண்டு.
நார்த்ராப் ஃபிரை என்பவர் இவரின் உலோகமும் பூக்களும் எனும் கவிதைத் தொகுப்பைப் பாராட்டி பின்வருமாறு கூறுகிறார். தூய்மையான கவிதை என்று ஒன்று இருக்குமானால் அது இதுவாகத்தான் இருக்க முடியும்.[5]
1954 ஆம் ஆண்டில் உலோகமும் பூக்களும் என்ற கவிதைத் தொகுப்பிற்காக தலைமைத் தளபதி விருதினைப் பெற்றார். மேலும் 1985 இல் கனடா எழுத்தாளர் சங்க விருதினை தெ கிளாஸ் ஏர் (கண்ணாடிக் காற்று) என்பதற்காகப் பெற்றார்.[4]
2004 இல் பிரிட்டிசு கொலம்பியாவின் இருபத்தி ஏழாவது துனை நிலை ஆளுநரான இனா காமபனோலோ அவர்களிடமிருந்து கலைத்துறையில் சிறப்பாகப் பங்காற்றியதற்காக துணை நிலை ஆளுநர் விருது (கலைத்துறை) பெற்றார். அப்போது பேஜ் , ஒரு உண்மையான மறுமலர்ச்சிப் பெண் எனப் பாராட்டப்பட்டார்.[6] மேலும் தெரசென் வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் இதே ஆண்டில் பெற்றார்.[7]
2006 இல் கனடாவின் ராயல் சொசைட்டியின் நண்பன் என அழைக்கப்பட்டார்.[8] மேலும் பல பல்கலைக்கழகங்களில் இவர் கௌரவப் பட்டம் பெற்றுள்ளார்.1985 இல் விக்டோரியா பல்கலைக்கழகத்திலும், 1989 இல் கால்கரிப் பல்கலைக்கழகத்திலும், 1990 இல் பிரிட்டிசு கொலம்பியாவில் உள்ள சைமன் ஃபிரேசர் பல்கலைக்கழகத்திலும், அதே ஆண்டில் குயெல்ஃபு பல்கலைக்கழகத்திலும், 1998 இல் ரொறன்ரோ பல்கலைக்கழகத்திலும், 2001 இல் வினிப்பெக் பல்கலைக்கழகத்திலும், 2004 இல் ஒன்றாரியோவில் உள்ள டிரென்ட் பல்கலைக்கழகத்திலும், 2005 ஆம் ஆண்டில் பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் கௌரவப் பட்டம் பெற்றார்.[6]